மேவானி கைது.. எதிர்ப்பை நசுக்க முயற்சிக்கலாம்.. ஆனால் உண்மையை சிறைப்படுத்த முடியாது.. மோடியை தாக்கிய ராகுல்
குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி கைது குறித்து, மோடி ஜி, நீங்கள் அரசு எந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் எதிர்ப்பை நசுக்க முயற்சிக்கலாம். ஆனால் உண்மையை சிறைப்படுத்த முடியாது என ராகுல் காந்தி தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் பிரபலமான தலித் தலைவராகவும், வட்கம் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாகவு இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. இவர் நேற்று முன்தினம் குஜராத்தில் பாலன்பூர் சர்க்யூட் ஹவுஸில் தங்கி இருந்தார். அன்று இரவு 11.30 மணியளவில் அங்கு வந்த அசாம் போலீசார் திடீரென அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அசாமில் பதிவான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி ஜிக்னேஷ் மேவானியை அசாம் போலீசார் அழைத்து சென்றனர்.
அசாம் போலீசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, ஜிக்னேஷ் மேவானி கைது தொடர்பாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி டிவிட்டரில், ஜிக்னேஷ் மேவானி கைது தொடர்பாக வெளியான செய்தியின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து இருந்தார்.
மேலும், மோடி ஜி, நீங்கள் அரசு எந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் எதிர்ப்பை நசுக்க முயற்சிக்கலாம். ஆனால் உண்மையை சிறைப்படுத்த முடியாது என பதிவு செய்து இருந்தார். இந்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.