×

அக்னிபாத் திட்டத்தால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் ஆகிய இரண்டும் ஆபத்தில் உள்ளன.. ராகுல் காந்தி

 

பிரதமரின் ஆய்வகத்தின் இந்த புதிய பரிசோதனையால் (அக்னிபாத் திட்டம்)  நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் ஆகிய இரண்டும் ஆபத்தில் உள்ளன என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு அண்மையில் முப்படைகளில் இளைஞர்கள் சேர ஏதுவாக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரையிலான இருபாலரும், 4 ஆண்டுகள் வரை முப்படைகளில்  பணிபுரியலாம். அதன்பிறகு சேவா நிதி எனப்படும் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு, அவர்கள் பணியில்  இருந்து விடுவிக்கப்படுவர். மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. மேலும் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடந்தது.  இருப்பினும், அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் பணிபுரிவதற்காக பல லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம் செய்தனர். நாடு முழுவதுமாக பல நகரங்களில் நேற்று இந்திய விமான படைக்கான அக்னிபாத் ஆட்சேர்ப்பு தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், பிரதமரின் ஆய்வகத்தின் இந்த புதிய பரிசோதனையால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் ஆகிய இரண்டும் ஆபத்தில் உள்ளன என அக்னிபாத் திட்டத்தையும், மத்திய அரசையும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி டிவிட்டரில், ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள், அதில் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைக்கும். 4 ஆண்டு ஒப்பந்தகளுக்கு பிறகு ஓய்வு பெறும் ஆயிரக்கணக்கான அக்னிவீரர்கள் எதிர்காலம் என்னவாகும்?. பிரதமரின் ஆய்வகத்தின் இந்த புதிய பரிசோதனையால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் ஆகிய இரண்டும் ஆபத்தில் உள்ளன என பதிவு செய்துள்ளார்.