×

நான் இந்த நாட்டிலிருந்து ஒரு பைசா கூட எடுக்கவில்லை, உண்மையை பேச எனக்கு பயமில்லை... ராகுல் காந்தி

 

நான் இந்த நாட்டிலிருந்து ஒரு பைசா கூட எடுக்கவில்லை, உண்மையை பேச எனக்கு பயமில்லை என ராகுல் காந்தி தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸின் சிந்தன் ஷிவிர் என்னும் ஆலோசனை கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் நேற்று ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: மத்தியில் உள்ள பா.ஜ.க. தலைமையிலான அரசு நாட்டிலுள்ள அனைத்து அமைப்புகளையும் முடக்கி வருகிறது. நமது போராட்டம் ஒரு அரசியல் கட்சிக்கு எதிரானது அல்ல ஆனால் அனைத்து நிறுவனங்களுக்கும் எதிரானது என்பதை நமது கட்சி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். நாம் மக்களுடான நமது தொடர்பை புதுப்பிக்க வேண்டும், அது உடைந்து விட்டது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் அதனை வலுப்படுத்துவோம். இது எந்த குறுக்கு வழியிலும் நடக்காது, அதற்கு கடின உழைப்பு தேவை. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. கொண்டு வந்ததன் மூலம், வேலைகளை உருவாக்கும் முதுகெலும்பை பிரதமரும், பா.ஜ.க.வும் உடைத்தது. இதனால் இந்திய பொருளாதாரம் தோல்வியடைந்து வருகிறது, வேலையில்லா திண்டாட்டம் இந்த அளவுக்கு அதிகமாக இருந்ததில்லை. அனைத்து சலுகைகளும் இரண்டு அல்லது 3 தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் அச்சுறுத்தலான பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிரானது எனது போர். இது எனது வாழ்க்கை போர். நாம் அனைத்து அமைப்புகளுக்கு (அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை) எதிராகவும் போராடுகிறோம். 

காங்கிரஸார் அச்சப்பட தேவையில்லை. நான் உங்களோடு நிற்கிறேன். உங்களுடன் இந்த போரில் ஈடுபடுவேன். இந்த நிறுவனங்களுக்கு நான் பயப்படவில்லை. நான் ஊழல் செய்யவில்லை. நான் இந்த நாட்டிலிருந்து ஒரு பைசா கூட எடுக்கவில்லை, எனக்கு உண்மையை பேச பயம் இல்லை. கட்சியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதவிகள் இளைஞர்களுக்கு இருக்க வேண்டும். டி.சி.சி., பி.சி.சி. மற்றும் தலைமைத்துவம் என்று வரும்போது, இளைஞர்களின் ஆரோக்கியமான ஈடுபாடு நம்மிடம் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். அவர்கள் (குடும்ப உறுப்பினர்கள்) அமைப்பில் சேரட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.