காங்கிரஸில் என் பங்கு என்ன என்பதை புதிய தலைவர் முடிவு செய்வார்... ராகுல் காந்தி
காங்கிரஸில் என் பங்கு என்ன என்பதை புதிய தலைவர் முடிவு செய்வார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன் கார்கே பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே என்பதை தெரிவித்தார். நேற்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் ஆந்திர பிரதேசத்தில் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு ராகுல் காந்திக்கு பதிலளிக்கையில் கூறியதாவது: காங்கிரஸ் தலைவரின் பங்கு குறித்து என்னால் கருத்து கூற முடியாது, அது குறித்து கார்கே தெரிவிக்க வேண்டும். காங்கிரஸில் எனது பங்கு என்ன என்பதை புதிய தலைவர் முடிவு செய்வார். காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து அனைவரும் கேள்விகள் கேட்கிறார்கள். காங்கிரஸூக்கு வெளிப்படையான கருத்துக் கணிப்புகள் இருந்ததில் நான் பெருமைப்படுகிறேன். பா.ஜ.க. மற்றும் பிற பிராந்திய கட்சிகள் உள்பட பிற கட்சிகளில் யாரும் தேர்தலில் ஆர்வம் காட்டாதது ஏன்?.
காங்கிரஸ்தான் நாட்டிலேயே தேர்தல் நடத்தும் ஒரே கட்சி மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளது. நான் மிஸ்திரியுடன் (காங்கிரஸ் தேர்தல் ஆணையர்) பணியாற்றியுள்ளேன். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்படும், இது குறித்து அவர் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கே 7,897 வாக்குகள் பெற்றார். அதேசமயம் அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார்.