×

நான் தான்தோன்றித்தனமாக சில வார்த்தைகள் பேசி விட்டேன்.. மன்னிப்பு கேட்ட ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர்

 

ராஜஸ்தான் பட்ஜெட்டை கருப்பான பெண்களுடன் ஒப்பிட்டு பேசியதற்காக, ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் சதீஷ் பூனியா மன்னிப்பு கேட்டார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் முதல்வர் அசோக் கெலாட்  2022-23ம் நிதியாண்டுக்கான அம்மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ராஜஸ்தான் மாநிலம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வேளையில், முதல்வர் அசோக் கெலாட் அந்த பட்ஜெட்டில், 2004 ஜனவரி 1 அன்று அல்லது அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கு அடுத்த அண்டு முதல் ஓய்வூதிய திட்டத்துக்கு உரிமை உண்டு உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டார்.

ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவரும், எம்.எல்.ஏ.வுமான  சதீஷ் பூனியா காங்கிரஸ் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தாக்கல் செய்த பட்ஜெட், கருப்பான மணமகளை அழகு நிலையத்துக்கு ஒப்பனை செய்து கொள்ள அழைத்து செல்வது போல் உள்ளது, அதனால் அவர் அழகாக இருக்கிறார் என்று தெரிவித்தார். பெண்களை இழிப்படுத்தும் வகையில் பேசியதாக சதீஷ் பூனியாவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. மேலும் காங்கிரஸ் கட்சியினரும் சதீஷ் பூனியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து, கருப்பான பெண் என்ற தனது சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக சதீஷ் பூனியா மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக சதீஷ் பூனியா தான் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பட்ஜெட்டுக்கு நான் எதிர்வினையாற்றினேன். அந்த நேரத்தில் நான் தான்தோன்றித்தனமாக சில வார்த்தைகள் பேசினேன். பொதுவாக நான் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை. எனது வார்த்தைகள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் நான் தாழ்மையுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என சதீஷ் பூனியா தெரிவித்தார்.