×

சோனியா காந்தியிடம் எனது ராஜினாமா கடிதம் நிரந்திரமாக உள்ளது... ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
 

 

ராஜஸ்தானில் முதல்வர் மாற்றப்படலாம் என பேசப்பட்ட வந்த நிலையில், சோனியா காந்தியிடம் எனது ராஜினாமா கடிதம் நிரந்திரமாக உள்ளது, முதல்வரை மாற்ற நினைத்தால் கட்சி சுயமாக முடிவெடுக்கும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முதல்வருமான அசோக் கெலாட்டுக்கும், அந்த கட்சியின் இளம் தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று சச்சின் பைலட், சோனியா காந்தியை சந்தித்து பேசினார். கடந்த 15 தினங்களில் சச்சின் பைலட் இரண்டாவது முறையாக  சோனியா காந்தியை சந்தித்து  பேசியுள்ளார். இதனால் ராஜஸ்தான் காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டது.

சச்சின் பைலட்- சோனியா காந்தி சந்திப்பை அடுத்து, ராஜஸ்தான் காங்கிரஸின் தலைமையில் (முதல்வர்) மாற்றங்கள் ஏற்படலாம் என ஊக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், எனது ராஜினாமா கடிதம் சோனியா காந்தியிடம் நிரந்தரமாக உள்ளது என அசோக் கெலாட் தெரிவித்தார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: சோனியா காந்தியிடம் எனது ராஜினாமா கடிதம் நிரந்திரமாக உள்ளது.

முதல்வரை மாற்ற காங்கிரஸ் முடிவெடுத்தால், யாருக்கும் எந்த குறிப்பும் கிடைக்காது, அது பற்றி (முதல்வரை மாற்றுவது) எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்படாது. காங்கிரஸ் மேலிடம் சுயாதீனமாக முடிவெடுக்கும். வதந்திகள் ஆட்சியை பாதிக்கும் என்பதால் அதற்கு யாரும் செவிசாய்க்க வேண்டாம். கடந்த 2-3 நாட்களாக ராஜஸ்தான் முதல்வரை மாற்றுவது குறித்து பேச்சு  இருந்தது. இது சரியல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.