×

சிவ சேனா ஏக்நாத் ஷிண்டேவுக்கு சொந்தமானது, உத்தவ் தாக்கரே தசரா பேரணியை வேறு இடத்தில் நடத்த வேண்டும்.. அதவாலே

 

சிவ சேனா ஏக்நாத் ஷிண்டேவுக்கு சொந்தமானது எனவே உத்தவ் தாக்கரே தசரா பேரணியை வேறு இடத்தில் நடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார்.


மகாராஷ்டிராவில் சிவ சேனா கட்சிக்கு தசரா விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தசரா முன்னிட்டு மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் பல பத்தாண்டுகளாக சிவ சேனா தசரா பேரணி நடத்தி வருகிறது. தற்போது சிவ சேனா, உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு பிரிவும், அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு பிரிவு என இரண்டு பிரிவுகளாக காணப்படுகிறது. இந்நிலையில், மும்பை சிவாஜி பார்க்கல் தசரா பேரணியை நடத்த சிவ சேனாவின் இரண்டு பிரிவுகளும் மும்பை மாநகராட்சி நிர்வாகத்திடம் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

இதனால் சிவ சேனாவின் எந்த பிரிவுக்கு சிவாஜி பார்க்கில் தசரா பேரணியை நடத்த  மும்பை மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்கும் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிவ சேனா ஏக்நாத் ஷிண்டேவுக்கு சொந்தமானது எனவே உத்தவ் தாக்கரே பி.கே.சி.யில் தசரா பேரணியை நடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராம்தாஸ் அதவாலே செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவ சேனாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்களில் ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு உள்ளது. எனவே கட்சி சின்னம் மற்றும் இதர பிரச்சினைகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தின் முன்பு உள்ள விவகாரங்களில் ஷிண்டே முகாமுக்கு சாதகமான முடிவகளை பெறும் நம்பிக்கை. 

என்னுடைய கருத்துப்படி, உண்மையான சிவ சேனா ஏக்நாத் ஷிண்டேவுக்கு சொந்தமானது என்பதால், சிவாஜி பூங்காவில் தசரா பேரணி நடத்த அவருக்கு தார்மீக உரிமை உள்ளது.அந்த தார்மீக உரிமை உத்தவ் தாக்கரேவின் கைகளில் இருந்து நழுவி விட்டது. பந்த்ராவின் புறநகர் பகுதியில் உள்ள வணிக மாவட்டமான பி.கே.சியில் தனது பிரிவின் பேரணியை உத்தவ் தாக்கரே நடத்த வேண்டும். பிரஹன் மும்பை மாநகராட்சி  நிர்வாகம் ஏக்நாத் ஷிண்டே பிரிவினருக்கு ஆதரவு அளித்து, சிவாஜி பூங்காவில் தசரா கூட்டத்தை நடத்த அவர்களுக்கு அனுமதி வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.