×

இப்படிப்பட்ட அரசியல் நடந்தால் இரண்டு  மாதங்களுக்கு பிறகு என்ன நடக்கும் என்று யாரால் யூகிக்க முடியும்?.. மத்திய அமைச்சர்

 

முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அரசாங்கத்தின் வீழ்ச்சியை குறிப்பிட்டு, இப்படிப்பட்ட அரசியல் நடந்தால் இரண்டு  மாதங்களுக்கு பிறகு என்ன நடக்கும் என்று யாரால் யூகிக்க முடியும்? என்று மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வே கேள்வி எழுப்பினார்.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் உள்ள கன்னாட் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராவ்சாகேப் தன்வே கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ராவ்சாகேப் தன்வே பேசுகையில் கூறியதாவது: 2019 மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வந்தபோது, சிவ சேனா தாங்கள்  இல்லாமல் அடுத்த அரசாங்கத்தை பா.ஜ.க.வால் அமைக்க முடியாது என்பதை உணர்ந்தது. 

அவர்கள் (சிவ சேனா) கட்சிக்கு அனைத்து விருப்பங்களும் திறந்திருப்பதாகக் கூறினர். பழைய கூட்டாளியான பா.ஜ.க.வுடன் உறவுகளை முறித்து கொண்டனர். முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதில் பா.ஜ.க.வுடான முறிவுக்கு பிறகு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சிவ சேனா கைகோர்த்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக ஆனவுடன் மகா விகாஸ் அகாடி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. 

இரண்டரை ஆண்டுகள் பதவியில் இருந்த மகா விகாஸ் அகாடி அரசாங்கம் கவிழும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால்  ஒரே இரவில் அரசாங்கம் வீழ்ந்த மாயம் நடந்தது. இப்படிப்பட்ட அரசியல் நடந்தால் இரண்டு  மாதங்களுக்கு பிறகு என்ன நடக்கும் என்று யாரால் யூகிக்க முடியும்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  சத்ரபதி சிவாஜி மகாராஜ் குறித்த மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரின் கருத்தால், ஆளும்  ஏக்நாத் ஷிண்டே சிவ சேனா பிரிவு-பா.ஜ.க. கூட்டணிக்குள் சிறு கருத்து  வேறுபாடு எட்டி பார்த்துள்ள நிலையில், ராவ்சாகேப் தன்வேயின் கருத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.