×

பழனிச்சாமியின்  கோல்மால்.. அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார்; ஆனால் கட்சியை இணைக்க வாய்ப்பில்லை-டிடிவி தினகரன்

 

அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார்.   ஆனால் கட்சியை இணைக்க வாய்ப்பு இல்லை என்று பேசினார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். 

 அதிமுகவுடன் இணைப்பிற்கான பேச்சு வார்த்தை நடக்கிறது .  எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய நான்கு பேரும் இணைந்தால் தான் அதிமுகவின் வெற்றி  சாத்தியப்படும்.  பாஜக தலைமையும் இதைத்தான் அறிவுறுத்தி வருகிறது.   திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் இந்த நான்கு பேரும் ஒன்று பட வேண்டும் என்று கட்சியினரும் கட்சிக்கு வெளியேயும் பேச்சு இருக்கும் நிலையில் அதிமுகவுடன் கட்சியை இணைக்க வாய்ப்பு இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

ஓபிஎஸ் அணியினரோ  எடப்பாடி அணி, டிடிவி தினகரன் அணி எல்லாம் இணைந்து செயல்பட நினைக்கின்றன. ஆனால், எடப்பாடி பழனிச்சாமியோ,  ஓ. பன்னீர் செல்வத்துடன் இனி இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்று தெரிவித்திருக்கிறார். சசிகலாவோ இன்னமும்  அதிமுகவில் உள்ளே வந்து பொதுச்செயலாளர் ஆகி கட்சிகளை  வழி நடத்துவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் . 

 அதிமுகவில் இந்த நான்கு பேரும் இணைந்து செயல்பட போகிறார்களா? இல்லையா? இணைப்பு இல்லை என்றாலும்  டிடிவி தினகரன் சொன்னது மாதிரி கூட்டணி வைக்க தயாராகிறார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.  

இந்த நிலையில்,    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார்.   அப்போது அவர் பேசிய போது ,   2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் துரதிர்ஷ்டவசமாக நான்கு ஆண்டுகள் அண்ணன் பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடந்தது .  

எடப்பாடி பழனிச்சாமியின் தவறான நிர்வாகம், முறைகேடு, ஊழல், திருவிளையாடலால் மக்கள் கோபம் அடைந்து திமுகவை தேர்ந்தெடுத்தார்கள்.   பழனிச்சாமி செய்திருக்கும் கோல்மாலால் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தொண்டர்கள் இன்றைக்கு போட்யிட முடியாத சூழல் இருக்கிறது. 

 ஜெயலலிதா தனக்குப் பிறகு யாரையும் கட்சி தலைமைக்கு ஏற்பாடு செய்யவில்லை.   தலைவர் பதவி வாரிசு பதவி இல்லை என்று ஜெயலலிதா தொடர்ந்து கூறி வந்தார். யார் தலைவராக வரவேண்டும் என்று தொண்டர்களே தீர்மானிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் கூறியிருந்தார்.   திமுகவை அழிக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார். ஆனால் கட்சியை  ஒன்றிணைக்க வாய்ப்பு இல்லை.   கடந்த முறையும் இதே கருத்தை முன்வைத்தேன்.   ஆனால் சிலரின் ஆணவத்தால் அது ஈடேறவில்லை என்று கூறினார்.