×

நாங்கள் தான் ஏக்நாத் ஷிண்டேவை இந்த நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினோம்.. உத்தவுக்கு கடிதம் எழுதிய கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள்

 

சிவ சேனா முதல்வராக இருந்தும், கட்சி எம்.எல்.ஏ.க்களால் முதல்வரை சந்திக்க முடியவில்லை, அனைத்திலும் நாங்கள் சோர்வடைந்துதான் இந்த நடவடிக்கையை எடுக்க ஏக்நாத் ஷிண்டேவை வற்புறுத்தினோம் என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் சிவ சேனாவின் செல்வாக்கு மிக்க தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கிளர்ச்சியால் (பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் இல்லையென்றால் கட்சியில் பிளவு) முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழும் சூழல் நிலவுகிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கிளர்ச்சி சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கு உணர்வுபூர்வமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் தங்களது மனகவலைகள் மற்றும் மனக்குமறல்களை கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர். ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலத்தில் சிவ சேனா முதல்வராக இருந்தும், அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் வர்ஷா பங்களாவுக்கு (முதல்வரின் இல்லம்) செல்லும் வாய்ப்பை பயன்படுத்த முடியவில்லை. 

முதல்வரை (உத்தவ் தாக்கரே) சுற்றி இருப்பவர்கள் அவரை சந்திக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பார்கள். நாங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தோம். முதல்வர் ஒரு போதும் தலைமை செயலகத்தில் இருந்ததில்லை, மாறாக மாடோ ஸ்ரீயில்தான் இருந்தார். முதல்வரை சுற்றியுள்ளவர்களை நாங்கள் அழைப்போம், ஆனால் அவர்கள் ஒருபோதும் எங்கள் அழைப்புகளை ஏற்பதில்லை. இவை அனைத்திலும் நாங்கள் சோர்வடைந்து, இந்த நடவடிக்கையை எடுக்க ஏக்நாத் ஷிண்டேவை வற்புறுத்தினோம். 

எங்களால் முதல்வரை சந்திக்க முடியவில்லை என்றாலும், எங்களது உண்மையான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸை சேர்ந்தவர்களுக்கு முதல்வரை சந்திக்க வாய்ப்புகள் கிடைத்தன. மேலும், அவர்களுக்கு தங்கள் தொகுதிகளில் வேலை தொடர்பான நிதியும் வழங்கப்பட்டது. இந்துத்துவா மற்றும் ராமர் கோயில் ஆகியவை கட்சிக்கு முக்கியமான விஷயங்களாக இருக்கும்போது, அயோத்தி செல்வதை கட்சி ஏன் தடுத்தது. ஆதித்யா தாக்கரேவின் அயோத்தி பயணத்தின்போது எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்பட்டு அயோத்திக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.