×

அது பழைய போட்டோ.. நான் டெல்லி செல்லவும் இல்லை, யாரையும் சந்திக்கவும் இல்லை... ஓம் பிரகாஷ் ராஜ்பர்

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன இருக்கும் போட்டோ பழைய போட்டோ, நான் டெல்லி செல்லவும் இல்லை,யாரையும் சந்திக்கவும் இல்லை என சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் தெரிவித்தார். 


சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வின் முன்னாள் கூட்டாளியான ஓம் பிரகாஷ் ராஜ்பர் தலைமையிலான சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி மொத்தம் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் சமாஜ்வாடி கூட்டணி 125 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜ.க. 255 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது.

இந்த சூழ்நிலையில், ஓம் பிரகாஷ் ராஜ்பர், மத்திய உள்துறை அமித் ஷாவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனையடுத்து, மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஓம் பிரகாஷ் ராஜ்பர் பேசியதாக கூறப்பட்டது. ஆனால் இதனை ஓம் பிரகாஷ் ராஜ்பர் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறுகையில், அறிக்கைகள் ஆதாரமற்றவை. நான் டெல்லி செல்லவும் இல்லை, யாரையும் சந்திக்கவும் இல்லை. உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறேன். சமாஜ்வாடி கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். அவை பழைய புகைப்படங்கள்.யாராவது பழைய புகைப்படங்களை மறுபதிவு செய்து அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று தெரிவித்தார்.