ஓபிஎஸ்சின் பொருளாளர் பதவி எஸ்பி வேலுமணிக்கு? எ.து.தலைவர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு?
சட்ட விரோதமாக எடப்பாடி பொதுக்குழுவை நடத்தியிருக்கிறார் என்று ஓபிஎஸ் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் எடப்பாடி அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அடுத்து கூடவிருக்கும் பொதுக்குழுவும் சட்டத்திற்கு விரோதமானது என்று ஓபிஎஸ் நீதிமன்றத்தையும் தேர்தல் அனைத்தையும் நாடுகிறார். அதைப்பற்றியும் கொஞ்சம் கூட அலட்டிகொள்ளாமல் எடப்பாடி பொதுக்குழுவை நடத்த இடம் தேடிக் கொண்டிருக்கிறார் . விஜிபி ரிசார்ட்டில் நடத்தலாம் என்று தற்போது முடிவுக்கு வந்திருக்கிறார்.
கட்சியில் இருப்பதால்தானே வழக்கு போடுகிறார் ஓபிஎஸ். அதனால் முதலில் அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டால் முன்னாள் உறுப்பினர் உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்றுதான், அப்படியொரு நிலையை கொண்டுவருவதற்கான காய்களை நகர்த்தி வருகிறார்.
அங்கே இங்கே போஸ்டர்களில் உள்ள ஓபிஎஸ் படத்தை கிழித்தவர்கள் கடைசியில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ் படத்தையும் கிழித்தெறிந்தார்கள். நமது அம்மா நாளிதழ் நிறுவர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ்சை தூக்கி எறிந்தார்கள்.
ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்று சொன்னவர்கள், பொருளாளர் பதவியை பறித்து கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளனர் எடப்பாடி அணியினர். அன்று சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஏற்பட்ட நிலைமைதான் இன்று ஓபிஎஸ்க்கு வந்திருக்கிறது.
ஓபிஎஸ்சிடம் இருக்கும் பொருளாளர் பதவியை பறித்து எஸ்.பி.வேலுமணிக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளனர் என்று தகவல். அதே போல் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியை திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், ராஜன் செல்லப்பா ஆகிய நான்கு பேரில் ஒருவருக்கு கொடுக்க ஆலோசித்து வருகிறார்கள். இதில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது என்கிறது அதிமுக வட்டாரம்.