மூத்தவர், தந்தை போன்றவர் என்பதால் அவரது அறிக்கைகளை நான் வேறுவிதமாக எடுத்துக் கொள்வதில்லை... சச்சின் பைலட்
மூத்தவர் மற்றும் தந்தை போன்றவர் என்பதால் அவரது அறிக்கைகளை நான் வேறுவிதமாக எடுத்துக் கொள்வதில்லை என அசோக் கெலாட்டின் கையுறை கருத்து குறித்து சச்சின் பைலட் தெரிவித்தார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2020ம் ஆண்டில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், அந்த கட்சியின் இளம் தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால் ராஜஸ்தான் அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைமை சச்சின் பைலட்டை சமாதானம் செய்ததையடுத்து அவர் அமைதியானார், முதல்வர் அசோக் கெலாட் அரசும் ஆபத்தில் இருந்து தப்பியது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் அசோக் கெலாட் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், அரசாங்கத்தை கவிழ்க்க நீங்கள் (பா.ஜ.க.வின் கஜேந்திர சிங் ஷெகாவத்) சதி செய்தீர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது சச்சின் பைலட் தவறு செய்துவிட்டதாக அவர் பெயரை சொல்கிறீர்கள். நீங்கள் அவருடன் (சச்சின் பைலட்) கைகோர்த்து இருந்தீர்கள் என்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளது என தெரிவித்து இருந்தார். இது சச்சின் பைலட்டை சீண்டுவதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக சச்சின் பைலட் கூறியதாவது: சில நாட்களுக்கு முன் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி எனது பொறுமையின் அளவை பாராட்டினார்.
ராகுல் போன்ற ஒரு தலைவர் என் பொறுமையின் அளவை பாராட்டுகிறார் என்றால், அவரது (அசோக் கெலாட்) அறிக்கையால் யாரும் தேவையில்லாமல் கலக்கமடைய வேண்டாம், அதை சரியான மனநிலையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கடந்த காலங்களில் அசோக் கெலாட் என்னை பற்றி நகரா, நிகம்மா (பயன் அற்றவர்) என பல விஷயங்களை கூறினார். இருப்பினும், அவர் அனுபவம் வாய்ந்தவர், மூத்தவர் மற்றும் தந்தை போன்றவர் என்பதால் அவரது அறிக்கைகளை நான் வேறுவிதமாக எடுத்துக் கொள்வதில்லை. தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.