சசிகலா நடத்திய யாகம்! சிறப்பு பூஜைகள்!
நாடாளுமன்ற தேர்தல், சட்ட மன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்று தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக தோல்வியை சந்தித்து வருவதால் இனியும் இந்த தோல்வி தொடரக்கூடாது என்று அதிமுகவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
அதனால் சசிகலா டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டுமென்று தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி ஐந்தாம் தேதி செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவது என்று முடிவு எடுத்துள்ளனர். இதேபோல் சில மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு ஆதரவாக நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆனால் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும், அவரது ஆதரவாளர்களும் மட்டும் இன்னும் சசிகலாவை அதிமுகவில் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதிமுகவுக்குள் வரவேண்டும் கட்சிக்கு தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்று ஆடியோ மூலம் தொண்டர்களிடம் பேசி வந்த சசிகலா, தற்போது தனக்கு சாதகமான சூழல் நிலவி வருவதால், , அதிமுகவில் மீண்டும் செல்லும் வாய்ப்பு நெருங்கி வருவதால் அதற்குள் திருச்செந்தூர் சென்று சிறப்பு யாகம் நடத்திவிட்டு வந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து, இதற்காக அவர் திருச்செந்தூருக்கு பயணம் செய்திருக்கிறார். அங்கு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாக வழிபாடு நடத்தி பூஜைகளை செய்கிறார் சசிகலா. அதன் பின்னர் அவர் சென்னை திரும்புகிறார்.