×

ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டும். ஆனால் காங்கிரஸ் அதை பெரிய நாடகமாக்குகிறது.. பா.ஜ.க.
 

 

ராகுல் காந்தி இன்று அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டும். ஆனால் காங்கிரஸ் அதை பெரிய நாடகமாக்குகிறது என சம்பிட் பத்ரா குற்றம் சாட்டினார்.

நேஷனல்  ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக  ஜூன் 13ம் தேதியன்று ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் என்றும், சோனியா காந்தி ஜூன் 23ம் தேதியன்று ஆஜராக வேண்டும் என்றும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதன்படி ராகுல் காந்தி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளார். அதேசமயம் இன்று காங்கிரஸ் கட்சி தனது வலிமையை காட்டவும், தனது அரசியல் செய்தியை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு தெரிவிக்கவும் ஒரு பெரிய நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ளது. இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தியுடன் அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்வார்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

காங்கிரஸின் இந்த நடவடிக்கையை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சம்பிட் பத்ரா கூறியதாவது: சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் ஜாமீனில் உள்ளனர். ராகுல் காந்தி நாளை (இன்று) அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டும். ஆனால் காங்கிரஸ் அதை பெரிய நாடகமாக்குகிறது. அவர்கள் (காங்கிரஸ்) தங்கள் தலைவர்களை டெல்லிக்கு அழைக்கிறார்கள். இந்த நாடகத்தால் என்ன பயன்? 

ஏன் இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு நாடகம்? அமலாக்கத்துறை முன் ஆஜராகி தவறை ஏற்றுக்கொள்ளுங்கள். இது என்ன சத்தியாக்கிரகம்? போலி காந்திகளின் இந்த போலி சத்தியாகிரகத்தை கண்டு காந்திஜி வெட்கப்படுவார். ராகுல் ஜி சட்டத்தில் இருந்து தப்பிக்க முயற்சிக்காதீர்கள். இது சட்டப்பிரச்சினையே தவிர அரசியல் பிரச்சினை அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.