×

டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளேன்... சஞ்சய் ரவுத் தகவல்

 

டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளேன் என்று ஜாமீனில் வெளியே வந்துள்ள சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறியிருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. 

கருப்பு பணப் பரிமாற்ற வழக்கில் கைதான சிவ சேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி. சஞ்சய் ரவுத்துக்கு மும்பை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். நேற்று காலையில் மும்பையில் பாண்டுப்பின் புறநகர் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே சஞ்சய் ரவுத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சஞ்சய் ரவுத் கூறியதாவது: உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் ஆகியோரை இன்று (நேற்று) சந்திக்க உள்ளேன். மக்கள் பணி தொடர்பாக 2-4 தினங்களில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்திக்க உள்ளேன். டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளேன். 

மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்கப்பட்டது, அவர்களின் சில நல்ல முடிவுகளை வரவேற்கிறேன். துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சில நல்ல முடிகளை எடுத்தார். மாநிலத்தை துணை முதல்வர் பட்னாவிஸ் நடத்துகிறார், அவர் மாநிலத்தை வழிநடத்துகிறார் என்று நாங்கள் உணர்கிறோம். பா.ஜ.க. மீதான எனது எதிர்ப்பு தொடரும். காலப்போக்கில் அரசியலின் நிலை குறைந்து விட்டது. நான் நாடாளுமன்ற உறுப்பினர், எனது சகோதரர் இங்கு எம்.எல்.ஏ.. தலைவர்களை சந்திக்க எனக்கு உரிமை உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் முழு தேசத்துக்கும் உரியவர், ஒரு கட்சிக்கு அல்ல. 

சிறைவாசம் என்பது எளிதான நேரம் அல்ல. சிறைக்குள் பெரிய சுவர்கள் உள்ளன. ஒருவர் அடிக்கடி சுவர்களுடன் பேசுகிறார். சாவர்க்கர் எப்படி பத்து வருடங்களை கழித்தார். திலகர், வாஜ்பாய் போன்ற தலைவர்கள் சிறைவாசத்தை எப்படி கழித்தார்கள் என்று நான் அடிக்கடி யோசித்தேன். ஆனால் எதுவாக இருந்தாலும் என் குடும்பம் சகிக்க வேண்டிய சம்பவம் நடந்தது. எனது கைதுக்கு பின்னால் அரசியல் பழிவாங்கல் உள்ளது. நான் சிறையில் பல மாதங்கள் இருந்த சோதனைக்கு எந்தவொரு மத்திய அமைப்புகளையும் குறை சொல்ல மாட்டேன். இவ்வாறு அவர்  தெரிவித்தார்.