×

உத்தவ் தேசிய தலைவராக உருவெடுப்பார் என மத்திய அரசு உணர்ந்ததால் சிவ சேனாவில் பிளவு ஏற்பட்டது.. சஞ்சய் ரவுத்

 

உத்தவ் தாக்கரே எதிர்காலத்தில் தேசிய தலைவராக உருவெடுக்க முடியும் என்பதை டெல்லி (மத்திய அரசு) உணர்ந்ததால் சிவ சேனாவில் பிளவு ஏற்பட்டது என்று சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

சிவ சேனாவின் அரசியல் ஊதுகுழலான சாம்னா பத்திரிகையில் தனது வாராந்திர கட்டுரையான ரோக்தோக்கில் சஞ்சய் ரவுத் எழுதியிருப்பதாவது: இப்போது (முதல்வர்) ஏக்நாத் ஷிண்டே செய்தது போலவே, அஜித் பவார் 2019ல் கிளர்ச்சி செய்து பட்னாவிஸூடன் அரசாங்கத்தை அமைத்தார். தேசியவாத காங்கிரஸ் தங்கள் கட்சியை முடித்து விடும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அப்போது கூறவில்லை. பா.ஜ.க.-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்திருந்தால், அது இயற்கைக்கு மாறான கூட்டணி என்று அழைக்கப்படுமா? 

அரசியலில் இயற்கையான அல்லது இயற்கைக்கு மாறான எதுவும் இல்லை. 2014ல் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டபோது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல் தனது கட்சி பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் சரத் பவார் ஒரு நல்ல சமன்பாட்டை பகிர்ந்து கொண்டார். அப்போது தேசியவாத காங்கிரஸின் ஆதரவை பா.ஜ.க. நிராகரிக்கவில்லை. கேசர்கர் மற்றும் சமந்த் (ஷிண்டே முகாம் சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள்) ஆகியோர் சிவ சேனாவில் இணைவதற்கு முன்பு தேசியவாத காங்கிரஸில் இருந்தனர். அவர்கள் ஏன் தேசியவாத காங்கிரஸை இந்த அளவுக்கு வெறுக்க வேண்டும்? அரசியலில் தார்மீக பிரச்சினையை விட, இது அரசியல் சுயநலம். 

டெல்லி (மத்திய அரசு) மகாராஷ்டிராவின் தலைமை சுதந்திரமாக வளர விரும்புவதில்லை, அதை எப்போதும் கீழே இழுத்து வருகிறது. அது மும்பையை தலைநகராகக கொண்டு சன்யுக்த மகாராஷ்டிரா (1960ல்) உருவானாலும், கர்நாடகாவில் மராத்தி மொழி பேசும் மக்கள்தொகை கொண்ட பெல்காம் மற்றும் பிற இடங்களை மகாராஷ்டிராவில் சேர்ப்பதற்கான பிரச்சினையாக இருந்தாலும் சரி. உத்தவ் தாக்கரே எதிர்காலத்தில் தேசிய தலைவராக உருவெடுக்க முடியும் என்பதை டெல்லி (மத்திய அரசு) உணர்ந்ததால் சிவ சேனாவில் பிளவு ஏற்பட்டது.