×

கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைக்கு பணிந்த சிவ சேனா.. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற தயார்.. சஞ்சய் ரவுத்
 

 

கட்சி பிளவுப்படுவதை தவிர்க்க கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைக்கு சிவ சேனா பணிந்துள்ளது, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற தயார் என சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் சிவ சேனா தலைவரும், அம்மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அவரது கட்சியை சேர்ந்த சுமார் 40 எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடான கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் இல்லையென்றால் சிவ சேனா பிளவு ஏற்படும் என கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களின் பலம் அதிகமாக உள்ளதால், அவர்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவ சேனாவை கைப்பற்றும் அபாயம் உள்ளதோடு, பா.ஜ.க.வின் ஆதரவோடு ஆட்சியையும் அமைத்து விட வாய்ப்புள்ளது. இதனால் சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைக்கு ஒகே சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: மகாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியேற சிவ சேனா தயாராக உள்ளது. ஆனால் கட்சி கிளர்ச்சியாளர்கள் தற்போது தங்கியுள்ள கவுகாத்தியில் இருந்து 24 மணி நேரத்துக்குள் மும்பைக்கு திரும்ப வேண்டும்.

எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்தியில் இருந்து தொடர்பு கொள்ளக் கூடாது, அவர்கள் மீண்டும் மும்பைக்கு வந்து முதல்வரிடம் விவாதிக்க வேண்டும். அனைத்து எம்.எல்.ஏ.க்களின் விருப்பமும் இதுவாக இருந்தால், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்த பரிசீலிக்க தயாராக உள்ளோம். ஆனால் அதற்காக அவர்கள் இங்கு வந்து முதல்வரிடம் (உத்தவ் தாக்கரே) விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.