×

திருட்டுத்தனமாக உருவான ஏக்நாத் ஷிண்டே அரசாங்கம் விரைவில் கவிழந்து விடும்... சஞ்சய் ரவுத் உறுதி
 

 

திருட்டுத்தனமாக உருவான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கம் அதன் சொந்த முரண்பாடுகளின்கீழ் கவிழ்ந்து விடும் என சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி அரசாங்கம் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 30ம் தேதியன்று ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசாங்கம் நீண்ட நாள் நீடிக்காது என சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.


உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா பிரிவை சேர்ந்தவரும், அந்த கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் கூறியதாவது: திருட்டுத்தனமாக உருவான இந்த இரட்டை நிலை அரசாங்கம் (ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கம்) அதன் சொந்த முரண்பாடுகளின்கீழ் கவிழ்ந்து விடும். இந்த அரசாங்கம் வலுவான அடித்தளத்தை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை, ஒரு போதும் இருக்காது.

பா.ஜ.க.வை போல ஒலிபெருக்கிகளில் தேதிகள் கொடுக்க மாட்டோம். ஆனால் இந்த அரசாங்கம் நிச்சயமாக நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை. ஏக்நாத் ஷிண்டே அரசாங்கம் அமைந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு பிறகும் அமைச்சர்கள் இலாக்ககள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.