×

கட்சிக்குள் யார் வந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்வதுதான் தலைமைக்கு அழகு- சசிகலா

 

கட்சிக்குள் யார் வந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்வதுதான் தலைமைக்கு அழகு என சசிகலா தெரிவித்துள்ளார்.

சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு சசிகலா மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவில் உள்ளவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம், அதன்படி எல்லோரையும் ஒன்றிணைத்து செல்வது தலைமைக்கு அழகு, எனவே தான் அனைவரையும் ஒன்றிணைக்க பாடுபட்டு வருகிறேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது. ஊராட்சி முதல் மாநகராட்சி வரை திமுகவினர் அதிகம் வெற்றி பெற்றுள்ளதால் அங்கு சூழல்  மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக மின் கட்டண உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் கடந்த 15 மாத திமுக ஆட்சியில் மக்களை கசக்கி பிழிகிறார்கள். 200 யூனிட்டுக்கு இதுவரை 170 ரூபாய் கட்டி வந்த  நிலையில் தற்போது அதனை 225 ஆக உயர்த்தியுள்ளனர். இதனால் தமிழகத்தில் 63 சதவீதம் பேர் பாதிக்கின்றனர். 
 
500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர்  10 சதவீதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு 580 கூடுதலாக செலவாகும். இது மட்டுமில்லாமல் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு மூன்று ரூபாய் மூன்று பைசா வீதம் ஒரு யூனிட்டுக்கு அதிகரித்து   உள்ளார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஆறு ரூபாய் 35 பைசாவாக தொழிற்சாலைகளுக்கு இருந்த கட்டணம் தற்போது ஒன்பது ரூபாய் 33 பைசாவாக உள்ளது. இதனால் சிறு குறு தொழிற்சாலை நடத்துவோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், அதிமுக வழக்கின் தீர்ப்பு  எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்திருந்தால் என்ன? என்னுடைய வழக்கின் தீர்ப்பு  வரும் போது அதனை பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.