×

எடப்பாடியை முதல்வராக்கியது ஏன்..? சசிகலா விளக்கம்

 

கொங்கு மக்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா மறைவிற்கு பின் ஏற்பட்ட நெருக்கடியான சூழலில் கொங்கு பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகியை முதல்வராக்கியதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

புரட்சி பயணம் மேற்கொண்டுள்ள வி.கே.சசிகலா இன்று சேலம் அரியானூரில் தொடங்கி சங்ககிரி, பள்ளிபாளையம் பகுதிகளை தொடர்ந்து ஈரோட்டில் தொண்டர்களை சந்தித்தார். ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே அவரது ஆதரவாளர்கள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். 

அப்போது பேசிய சசிகலா,  “அதிமுகவையும் கொங்கு மக்களையும் பிரிக்க முடியாது. இது இன்று நேற்று ஏற்பட்ட பந்தம் அல்ல. அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கிய காலம் முதல் அன்பும் ஆதரவும் அளித்து வருகிறீர்கள். இதற்காக கொங்கு மக்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்து வருகிறோம். இதனை மனதில் வைத்தே,  ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆட்சியை காப்பாற்றுவதற்கான நெருக்கடி நிலை ஏற்பட்ட போது, இந்த பகுதியை சேர்ந்த நிர்வாகியை மாநிலத்தின் முதல்வராக ஆக்கினேன். இதன் மூலம் எந்தவித பிரதிபலனும் பாராமல் இயக்கத்தின் நலன் காக்க உண்மையான பங்களிப்பை செய்த மன நிறைவு உள்ளது. 

மீண்டும் இயக்கத்தை பேரியக்கமாக கொண்டு வருவேன். நியாயமும் உண்மையும் தோற்காது. ஜெயலலிதா என்னுடன் அருகில் இருந்து அனைத்தையும் பார்த்து கொண்டுள்ளார். நட்புக்கு இலக்கணமாய் நல்ல சகோதரிகளாய் இருந்தோம். ஜெயலலிதா கட்சிக்கு பொறுப்பேற்ற போது ஏற்பட்ட சிரமங்களை உடனிருந்து பார்த்தவள் நான். எம்ஜிஆர், ஜெயல்லிதா அனைவரையும் அரவணைத்து சமமாக நடத்தினார்கள். அதே வழியில் நானும் பயணிக்கிறேன்” எனக் கூறினார்.