ஆட்சியை மாற்ற வேண்டிய நேரம் இது... விவசாயிகளை உசுப்பேத்தும் மேகாலயா கவர்னர்
ஆட்சியை மாற்ற வேண்டிய நேரம் இது, ஒன்றுபடுங்கள், உங்கள் சொந்த அரசாங்கத்தை உருவாக்குங்கள் என விவசாயிகளை மேகாலயா கவர்னர் சத்ய பால் மாலிக் வலியுறுத்தியுள்ளார்.
ஹரியானா மாநிலம் ஜிந்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேகாலயா கவர்னர் சத்ய பால் மாலிக் கலந்து கொண்டார். அந்த கூட்டடத்தில் சத்ய பால் மாலிக் பேசுகையில் கூறியதாவது: கவர்னர் பதவி காலம் முடிவடைந்த பிறகு, விரைவில் விவசாயிகளை ஒன்றிணைக்க வட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். அவர்களை (விவசாயிகள்) ஆட்சி அமைக்க வலியுறுத்துவேன்.
ஆட்சியை மாற்ற வேண்டிய நேரம் இது. ஒன்றுபடுங்கள், உங்கள் சொந்த அரசாங்கத்தை உருவாக்குங்கள். நாம் 700க்கும் மேற்பட்ட விவசாயிகளை இழந்து விட்டோம். நாய்க்குட்டியின் மரணத்துக்கு கடிதம் எழுதும் பிரதமர் , அவர்களின் (விவசாயிகள்) மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்க ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க தவறி விட்டது.
ஏனெனில் 3 வேளாண் சட்டங்களும், பானிபட்டில் 50 ஏக்கர் நிலத்தில் குடோன் கட்டிய பிரதமரின் நண்பரால் கொண்டு வரப்பட்டது, குறைந்த விலையில் கோதுமையை கொள்முதல் செய்து, அதிக விலைக்கு விற்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இது விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையிலான போர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.