×

"முடிந்தால் கூட்டணி இல்லாமல் தேர்தலில் நின்று வெற்றி பெறுங்கள்" அண்ணாமலைக்கு சீமான் சவால்

 

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பா.ஜ.க தான் என்று கூறி வரும் அண்ணாமலை 2024 ஆம் ஆண்டு தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடட்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

2018 ஆம் ஆண்டு திருச்சி சர்வதேச விமான  நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியனருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பந்தபட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 2ல் ஆஜரானார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதிமுகவிற்கும் எங்களுக்கும் எந்த பகையும் இல்லை. அண்ணன் வைகோவிற்கும், எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அவர்கள் எங்களுக்கு எதிரி கிடையாது. என்னுடைய எதிரி யார் என்பதை தீர்மானித்து விட்டு தான் நான் பயணம் செய்கிறேன். சென்னையில் 20 நாளில் 18 கொலைகள் நடந்துள்ளது. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்பதை நாம் எப்படி ஏற்பது.

பேரறிவாளன் விடுதலை நாங்கள் எந்த வகையிலும் கொண்டாடவில்லை. கொண்டாட வேண்டுமென்றால் என் தம்பி விடுதலைக்கு நான் தான் முக்கியமாக கொண்டாட வேண்டும். பேரறிவாளன் நிரபராதி இல்லை என கூறும் அண்ணாமலை அமித்ஷாவுக்கும், மோடிக்கும் குஜராத் கலவரத்தில் எந்த தொடர்பும் இல்லை என நீதிமன்றம் கூறிய தீர்ப்பை எப்படி பார்க்கிறார். அவர்கள் விடுதலை செய்யப்பட்டால் நிரபராதி, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டால் அவர் நிரபராதி அல்ல குற்றவாளியா ? 

தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம்களை மூட வேண்டும் அது ஈழ தமிழர்களுக்கு வதை முகாம்களாக இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களில் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம் என அண்ணாமலை கூறி உள்ளார். மொத்த இடங்களில் கூட வெற்றி பெறட்டும் ஆனால் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள். ஆட்சி பொறுப்பேற்று எட்டாண்டுகளில் என்ன சாதனை செய்து விட்டார்கள். பண மதிப்பிழப்பு உள்ளிட்டவற்றால் மக்களுக்கு துன்பம் தான் ஏற்பட்டது. ரபேல் ஊழல் விவகாரத்தில் கோப்புகளை கூட பாதுகாக்க முடியாத நிலையில் தான்  பாதுகாப்பு துறை உள்ளது. பா.ஜ.க தான் தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெறுவோம் என அண்ணாமலை கூறுகிறார். அப்படி என்றால் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் அவர்கள் தனித்து போட்டியிடட்டும். அதற்கு அவர்களுக்கு துணிவு இல்லை. பா.ஜ.க வால் அ.தி.மு.க விற்கு ஆபத்து என பொன்னையன் கூறி இருப்பது என்பது அவருக்கு மனச்சான்று உசுப்பி இருப்பதை காட்டுகிறது. அவரின் கருத்தை நான் மதிக்கிறேன்” எனக் கூறினார்.