×

ஜெயலலிதா உதவியாளருக்கு நன்றி சொன்ன சீமான்

 

என் அப்பனை   பிடித்திருக்கிறார். அவர் வெற்றிப் பாதையை நோக்கி வேகமாக நகர்வதாக என் மனம் அறிவுறுத்தியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை இருங்கிணைப்பாளர்  சீமானுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கம்.

அற்புதமாக, அலட்டல் இல்லாமல், சாதுர்யமாக வளர்ந்து கொண்டிருப்பவர். இளைய தலைமுறையினர் அவருடைய பேச்சுக்கு ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இது கொள்ளை கூட்டம் அல்ல கொள்கை கூட்டம் என்ற உணர்வை அவரது தொண்டர்கள் விதைத்து கொண்டிருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய கட்சியில் நின்றவர்கள் கூட வாபஸ் பெற்றார்கள். ஆனால் இவரது கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் வாபஸ் பெறவில்லை என்பது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. அவரை சந்திக்கும் போது கண்டிப்பாக வாழ்த்த வேண்டும் என்று அப்போதே என் மனம் விரும்பியது என்கிறார் பூங்குன்றன்.

அவர் மேலும்,  நான் பார்த்த அரசியல் பயணத்தில் பலர் உருவாகி உடனே உருக்குலைந்து போயிருக்கிறார்கள். வளர்ந்த வேகத்தில் தேய்ந்து போயிருக்கிறார்கள். எந்தவித கூட்டணியும் இல்லாமல் ஒருவர் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறார் என்றால் அது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் தான். கபடி விளையாட்டில் திறமை மிகுந்த விளையாட்டு வீரர் வேகமாக ஆடாமல் காலை தரையில் மெதுவாக அசைத்து அசைத்து யாரும் கவனிக்காத வகையில் காலை நகர்த்தி எதிர்த்தரப்பு ஆட்களை தொட்டுவிட்டு வருவார். வேடிக்கை பார்ப்பவர்கள் அவரைத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்களே தவிர அவரது காலை கவனிக்க மறந்திருப்பார்கள். அப்படி அரசியலில் அற்புதமான  ஆட்டக்காரராக விளையாடி வருகிறார் சீமான் என்கிறார். 

சமீபத்தில் பாம்பன் ஆலயத்தில் இரவு ஒரு கருப்பு நிற கார் பூஜைக்காக நின்று கொண்டிருந்தது. காரின் எண் எட்டு. யாருடையது என்று கேட்டால் சீமான் வந்திருக்கிறார் என்று சொன்னார்கள். சனி பகவானின் ஆதிக்கம் பெற்றிருப்பவர் என்பது அவரது காரின் வண்ணத்தில் இருந்தும், எண்ணில் இருந்தும் தெரிந்து கொண்டேன். தூரத்தில் இருந்து நடப்பதை பார்த்து கொண்டிருந்தேன். வர வேண்டிய இடத்திற்குத்தான் வந்திருக்கிறார் என்று என் உள்மனம் சொல்லியது என்று சொல்லும் பூங்குன்றன், 

அடுத்த நாள் காலை என் நண்பர் திருப்போரூர் வரைக்கும் சென்று வரலாமா? என்று கேட்டார். நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்கி சென்றேன். நண்பரின் வேலையை முடித்துவிட்டு திருப்போரூர் முருகன் கோயிலுக்குள் சென்றோம். அப்போது கோயில் ஊழியர் சீமான் வருவதாக சொல்லி இருக்கிறார் என்றார். உடனே நான் நேற்று இரவு பாம்பன் குமரகுருபரர் ஆலயத்தில் பார்த்தேன் என்றேன். முருகனை மனதார தொழுதுவிட்டு நாங்கள் வெளியே வரும் போது எங்களை கடந்து அவர்கள் உள்ளே சென்றார்கள். அவருடன் பேச வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கோயிலில் தொல்லை செய்ய மனம் விரும்பவில்லை. அவரது பின்னால் அவருடைய மனைவி வந்து கொண்டிருந்தார். தங்கையிடம் நலம் விசாரிக்க மனம் மிகவும் ஆசைப்பட்டது. காரணம், என் மீது மிகுந்த பாசம் கொண்ட ஆற்றல்மிகு பேச்சாளர் டாக்டர் காளிமுத்து அவர்களின் மகள். அதனால் தான் அவர் எனது தங்கை என்றேன் என்கிறார். 

முதல் நாள் இரவு பாம்பன் ஆலயத்தில் பார்த்தேன். அடுத்த நாள் காலை சிதம்பர சுவாமிகள் எழுப்பிய திருப்போரூர் முருகன் சன்னதியில் பார்த்தேன். முருகனைப் பிடித்திருக்கிறார். என் அப்பனை   பிடித்திருக்கிறார். அவர் வெற்றிப் பாதையை நோக்கி வேகமாக நகர்வதாக என் மனம் அறிவுறுத்தியது. வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு சீமான்,  ‘’முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் உதவியாளர் அருமை சகோதரர் பூங்குன்றன் அவர்களின் எண்ணத்திற்கும் வாழ்த்திற்கும் என் நன்றிகள்’’ என்று தெரிவித்திருக்கிறார்.