×

நான் பேட்டி கொடுக்க முடியாது! ஜெயக்குமார், சிவி சண்முகத்துக்கு மட்டுமே அந்த உரிமை... தெறித்து ஓடிய செங்கோட்டையன்

 

 அதிமுகவில் ஒற்றை தலைமையைக் கொண்டு வந்து பொதுச்செயலாளர் ஆகிவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி இத்தனை நாளும் எடுத்துவந்த முயற்சியுடன் அந்த முயற்சியை தீவிரப்படுத்தி இருக்கிறார்.   இதனால் ஓபிஎஸ் -எடப்பாடி தரப்பு ஆதரவாளர்கள் அவர்கள் பகுதியில் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.   குறிப்பாக தென் மண்டலங்களில் பன்னீர் செல்வத்திற்கும்,  கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஆதரவாக  போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோபி அருகே உள்ள வெள்ளாங்கோயில் பகுதியில் வளர்ச்சி பணிகளை முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சரும், அதிமுகவின் மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவரிடம் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் முயன்ற போது, பேட்டி அளிக்க மறுத்த கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் மட்டுமே பேட்டி அளிக்க வேண்டும் என்றும், மற்றவர்கள் பேட்டி அளித்தால் தவறாகி விடும் என்றும் மழுப்பினார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் என இருவருக்குமிடையே ஒற்றை தலைமை குறித்த கருத்து வேறுபாடு உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே பேட்டி அளித்து வரும் நிலையில் மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையன் மழுப்பிச்சென்றார். அரசியல் தொடர்பான கேள்விகள் தற்போதைய சூழ்நிலையில் பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்பதாலேயே அவர் பேட்டி அளிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.