கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர்தான் முதல்வராக வர முடியும் என பேசினேனா? செங்கோட்டையன் விளக்கம்
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் தான் முதலமைச்சராக வர முடியும் என்ற பொருளில் பேசியது அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக கோவை செல்வராஜ் செய்தியாளர் சந்திப்பின் போது, கே.ஏ.செங்கோட்டையன் கட்சியில் இருந்து விலக வேண்டும் என்றும்இல்லை என்றால் இது தான் அவரது இறுதி தேர்தல் என கூறி இருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “கோவை செல்வராஜூக்கு பதில் கூறினால் என் தரம் குறைந்து விடும். நான் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் என்பதாலும், அவர் ஓ.பி.எஸ்.ஆதரவாளர் என்பதாலும் இந்த குற்றச்சாட்டை கோவை செல்வராஜ் கூறுகிறார். என்னை பொறுத்த வரையில் தெளிவாக அங்கே பேசி உள்ளேன்.ஒரு வரி கூட அப்படி பேசவில்லை. அதை புரிந்து கொண்டு அவர்கள் பேசினால் நலமாக இருக்கும். நான் கோவை செல்வராஜ் பற்றி சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் என்னுடைய தகுதிக்கு நான் அவருக்கு பதில் கூறுவது சரியாக இருக்காது.
என்னை பொறுத்த வரை தெளிவாக அங்கு சொல்லப்பட்ட வார்த்தைகள் வேறு.சித்தரிக்கப்பட்ட வார்த்தைகள் வேறு. அங்கு சொன்ன வார்த்தைகள் வேறு. ஒரு சமுதாயத்தை சார்ந்து இருக்கிற ஒருவர் தற்காலிக பொதுச்செயலாளராக இருக்கும் போது உங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை என்று சிலர் கேட்கின்றனர். இது அண்ணா திமுக என்றும் தந்தை பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் வழியில் வந்து இருக்கும் இந்த இயக்கத்தில், சாதி,மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த இயக்கம் நடைபைற்று வருகிறது. அனைத்து இனத்தை சார்ந்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால் தான் வாய்ப்பு எனக்கு அளிக்கவில்லை என்று கூறினேன். சொல்லாத கருத்துகளை சொன்னதாக செய்திகள் வந்தது. அதன் பிறகு செல்வராஜ் கொச்சையாக பேசினார். அப்படி பேசுவது அவரது வழக்கம் தான். அவர் முழுமையாக வீடியோவை பார்த்துவிட்டு கேட்கட்டும் அதன் பிறகு பதில் கூறுகிறேன். ஏனென்றால் அவருக்கு எல்லாம் பதில் கூறினால் என்னுடைய தரம் குறைந்துவிடும்” எனக் கூறினார்.