×

நான் வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது எனக்கு கிடைத்த ஆதரவை நீங்கள் பார்ப்பீர்கள்.. சசி தரூர் 

 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் நான் வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது எனக்கு கிடைத்த ஆதரவை நீங்கள் பார்ப்பீர்கள் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தலைவர் தேர்தலில் விருப்பம் உள்ளவர்கள் வரும் 30ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். தற்போதைய நிலவரப்படி,  சசி தரூர் மற்றும்  அசோக் கெலாட் ஆகியோர் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. சசி தரூர் போட்டியிடுவதற்கு சில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம், அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று பலர் கருதுகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சசி தரூர் நம்பிக்கை தெரிவித்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் நேற்று ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் சசி தரூர் பேசுகையில் கூறியதாவது: நான் படிவத்தை  (வேட்புமனு) சமர்ப்பிக்கும் போது, எனக்கு கிடைத்த ஆதரவை பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அதனால்தான் நான் போட்டியில் இறங்கினேன்.

எல்லா மாநிலங்களிலிருந்தும்  எனக்கு ஆதரவு கிடைத்தால் மட்டுமே நான் போட்டியில் ஈடுபடுவேன். ஆனால் இப்போது அவர்கள் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர். நான் முன்னோக்கி செல்ல முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தலை பா.ஜ.க. கிண்டல் செய்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் காந்தி குடும்பத்தின் கைகளில் ஒரு பொம்மையாக இருப்பார் என்று என்று பா.ஜ.க. தெரிவித்தது.