×

சஞ்சய் ரவுத்தை கைது செய்த அமலாக்கத்துறை.. இது எனக்கும், சிவ சேனாவுக்கும் எதிரான சதி... சஞ்சய் ரவுத் குற்றச்சாட்டு
 

 

பத்ரா சால் நில ஊழல் வழக்கில், உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

பத்ரா சால் நில ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 1ம் தேதி சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் அமலாக்கத்துறை முன் ஆஜரானார். அதன் பிறகு அமலாக்கத்துறை 2 முறை சம்மன் அனுப்பியும் சஞ்சய் ரவுத் விசாரணைக்கு ஆஜராகவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடப்பதை காரணம் காட்டி ஆகஸ்ட் 7ம் தேதி வரை விசாரணைக்கு ஆஜராகவதில் விலக்கு அளிக்கும்படி கோரினார். 

இந்நிலையில், நேற்று காலை 7 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் மும்பையின் கிழக்கு புறநகரில் உள்ள பாண்டப்பில் உள்ள சஞ்சய் ரவுத்தின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல். சோதனை முடிந்த பிறகு, சஞ்சய் ரவுத்தை அமலாக்கத்துறை கைது செய்து அழைத்து சென்றனர். 

அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அழைத்து செல்லும்போது, சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு எதிராக போலி ஆதாரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இது எனக்கும், சிவ சேனாவுக்கும் எதிரான சதி. நான் அடிபணிய மாட்டேன் என தெரிவித்தார். முன்னதாக அமலாக்கத்துறை தனது வீட்டில் சோதனை நடத்தியபோது, சஞ்சய் ரவுத் டிவிட்டரில், எந்த ஊழலிலும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மறைந்த பாலாசாகேப் தாக்கரே மீது சத்தியம் செய்கிறேன். நான் சிவ சேனாவை விட்டு வெளியேற போவதில்லை. தனக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தொடர்ந்து போராட போகிறேன் என பதிவு செய்து இருந்தார்.