×

மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தாலும் மக்களின் வாழ்வில் இருள் சூழ்ந்துள்ளது... தாக்கரே பிரிவு குற்றச்சாட்டு
 

 

மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தாலும் மக்களின் வாழ்வில் இருள் சூழ்ந்துள்ளது என்று உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா பிரிவு குற்றம் சாட்டியுள்ளது

மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் (ஷிண்டே பிரிவு) சிவ சேனா-பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பிரிவின் அரசியல் ஊதுகுழலான சாம்னா பத்திரிகை மகாராஷ்டிரா மற்றும் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. சாம்னா பத்திரிகையில்  கூறப்பட்டுள்ளதாவது:  ஆட்சியாளர்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகிறார்கள் ஆனால் குடிமக்கள் மற்றும் விவசாயிகளின் நிலை என்ன என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தாலும் மக்களின் வாழ்வில் இருள் சூழ்ந்துள்ளது. நல்ல நாள் தீபாவளி எங்கே தொலைந்தது? பொருளாதாரம் ஏன் மோசமான நிலையில் உள்ளது? அதிகரித்து வரும் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு ஏன் தொடர்ந்து சரிந்து வருகிறது? பணவீக்கம் ஏன் குறையவில்லை? எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை ஏன் உயர்கிறது? வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஏன்? இந்த பிரச்சினைகளை குடிமக்கள் எதிர்கொள்கின்றனர்.  

அவை மோசமடையும் போது அரசாங்கம் அகற்றப்படும். மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளை குடிமக்கள் மறந்துவிட்டார்கள் என்ற மாயையில் அரசாங்கம் இருக்கக் கூடாது. தீபாவளி பண்டிகை முடிவதற்குள் விவசாயிகள் மற்றும் குடிமக்களுக்கு  தேவையான நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.