கைகளை உடைக்க முடியாவிட்டால், அவர்களின் கால்களை உடைத்து விடுங்கள்... சிவ சேனா எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ. ஒருவர், அவர்களின் கைகளை உடைக்க முடியாவிட்டால், அவர்களின் கால்களை உடைத்து விடுங்கள் அடுத்த நாள் உங்களை நான் ஜாமீனில் எடுக்கிறேன் என்று பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவ சேனா-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏக்நாத் ஷிண்டே பிரிவை சேர்ந்த சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள் ஒருவர் பின் ஒருவராக பிரச்சினையில் சிக்கி வருகின்றனர். நேற்று ஹிங்கோலி மாவட்டத்தில, ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ. சந்தோஷ் பங்கர், மதிய உணவு தயாரித்து கொண்டிருந்த சமையல் ஊழியரை உணவின் தரம் குறைவாக இருப்பதாக குற்றம் சாட்டி அறைந்த சம்பவம் பெரும் வைரலானது. மேலும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள், ஏக்நாத் ஷிண்டே பிரிவை சேர்ந்த மற்றொரு சிவ சேனா எம்.எல்.ஏ. பிரகாஷ் சர்வே புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். சிவ சேனா எம்.எல்.ஏ. பிராகஷ் சர்வே நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பிரகாஷ் சர்வே என்ற நான் உங்களுக்காக இங்கே இருக்கிறேன். உங்களால் அவர்களின் கைகளை உடைக்க முடியாவிட்டால், அவர்களின் கால்களை உடைத்து விடுங்கள்.
கவலைப்படாதீர்கள். அடுத்த நாள் நான் உங்களுக்கு ஜாமீன் தருகிறேன் (எடுக்கிறேன்). நாம் யாருடனும் சண்டையிட மாட்டோம், ஆனால் நம்முடன் யாராவது சண்டையிட்டால், நாம் அவர்களை விட்டுவிட மாட்டோம் என்று தெரிவித்து இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனா இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது.