×

நான்  இதுவரை மாட்டிறைச்சி சாப்பிடாத ஒரு இந்து, ஆனால் விரும்பினால் அதை சாப்பிடுவேன்..  பொங்கிய சித்தராமையா
 

 

நான் இதுவரை மாட்டிறைச்சி சாப்பிடாத ஒரு இந்து. ஆனால் நான் விரும்பினால், நான் அதை சாப்பிடுவேன். என்னை கேள்வி கேட்க நீங்கள் யார்? என ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சித்தராமையா தாக்கினார்.

கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா, மாட்டிறைச்சி தடை குறித்து பேசியிருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சித்தராமையா பேசுகையில் கூறியதாவது:  மாட்டிறைச்சி உண்பவர்கள் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல, இந்துக்கள் கூட மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். கிறிஸ்தவர்களும் அதை சாப்பிடுகிறார்கள். 

ஒரு முறை கர்நாடக சட்டப்பேரவையில் கூட சொல்லியிருக்கிறேன். என்னை மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என்று சொல்ல நீங்கள் யார்?. ஆர்.எஸ்.எஸ். சக மனிதர்களிடையே வேறுபாடுகளை உருவாக்குகிறார்கள். மாட்டிறைச்சி சாப்பிடுவது உணவு பழக்கம். அது எனது உரிமை. முஸ்லிம்கள் மட்டும்தான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்களா?. நான் நான் இதுவரை மாட்டிறைச்சி சாப்பிடாத ஒரு இந்து. ஆனால் நான் விரும்பினால், நான் அதை சாப்பிடுவேன். என்னை கேள்வி கேட்க நீங்கள் யார்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கர்நாடகாவில் பா.ஜ.க. அரசாங்கம், 2021 ஜனவரியில், கர்நாடகா பசுக்கள் படுகொலை தடுப்பு மற்றும் பாதுகாத்தல் சட்டம் 2020ஐ இயற்றியது. இந்த சட்டத்தின்படி, பசுக்கள், காளைகள், எருமைகள் மற்றும் எருதுகள் உள்பட அனைத்து வகையான கால்நடைகளையும் வாங்குவது, விற்பது, கொண்டு செல்வது மற்றும் வியாபாரம் செய்வது சட்டவிரோதமானது.