×

 ஸ்நேக் பாபு.. அமைச்சர் சேகர்பாபு மீது  எச்.ராஜா ஆவேசம்

 

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்துக்களுக்கு ஸ்நேக் பாபுவாக திகழ்கின்றார் என்று ஆவேசத்துடன் கூறியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா.   சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

 எச். ராஜா இது குறித்து மேலும்,    ’’9 மாதங்களாக கோவிலை சரி செய்யாமல் இருந்தது அறநிலையத்துறை அதிகாரிகள் செய்த தவறு.  அதை செய்யாமல் இருந்ததால்தான் பொதுமக்கள் கையில் எடுத்தார்கள்.    தவறு என்றால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியதுதான்.   கார்த்திக் கோபிநாத் வசூல் செய்த பணம் எந்த பயன்பாட்டுக்காக வசூல் செய்தாரோ அந்த பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.   கோவிலை புனரமைக்க அனுமதி கேட்டும் இதுவரை அனுமதி வழங்கவில்லை.  

 அப்படி இருக்கும் போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.   மாரிதாஸ், கிஷோர் கே. சாமி,  கல்யாணராமன் வரிசையில் கார்த்திக் கோபிநாத்  கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்’’என்று தெரிவித்திருக்கிறார்.

’’ தமிழக காவல்துறை இரண்டு மாதத்தில் 5 லாக்கப் டெத் நடத்திய கொலைகாரர்கள் கார்த்திக் கோபிநாத்தை எங்கு வைத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை’’ என்று தெரிவித்திருக்கும் எச். ராஜா,  ‘’ இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்துக்களுக்கு ஸ்நேக் பாபுவாக திகழ்கின்றார்.  அதனால் மக்கள் போராட்டத்தின் மூலம் அறநிலையத் துறையில் இருந்து இந்து கோயில்கள் மீட்பதை தவிர இந்துக்களுக்கு வேறு வழி இல்லை’’ என்று தெரிவித்திருக்கிறார் ’’இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அமைச்சர் சேகபாபு பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் இணையதளம் மூலமாக சிறுவாச்சூர் கோவிலை புனரமைக்கப் போகிறேன் என்று அறிவித்தார் .  இதற்கு பலரும் நிதி உதவி செய்து வந்தனர்.  இந்த நிதி உதவி மொத்தமாக 34 லட்சம் ரூபாய் வசூல் ஆகி இருக்கிறது.   இந்த தொகையை அவர் மோசடி செய்து விட்டதாக புகார் கூறப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  இந்த விவகாரத்தில்தான் எச்.ராஜா ஆவேப்பட்டுள்ளார்.