×

சோனியாதான் தலைவர்! செயற்குழு  எடுத்த முடிவு

 

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் படுதோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்டு சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி மூன்று பேரும் கட்சியை விட்டு விலக வேண்டும் என்று கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து குரல்கள் வலுத்து வந்த நிலையில்,   சோனியா காந்தியே காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்வார் என்று அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

 உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் ஒரு மாநிலத்தில் கூட காங்கிரஸ் வெற்றியை பெறமுடியவில்லை.   உத்தரபிரதேசத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது அக்கட்சிக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்தது . நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது என்று கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது காங்கிரஸ்.

இதனால் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் சோனியா காந்தி பதவி விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர் . எதிர்க்கட்சியினர் இவ்வாறு சொல்லி வந்த நிலையில் கட்சிக்கு உள்ளேயும் அதிருப்தி தலைவர்கள் இவ்வாறு சொல்லி வந்தனர்.

 இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை கூடியது.   மூன்று மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் சோனியா காந்தியே காங்கிரஸ் தலைவராக தொடர்வார் என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

 இதுகுறித்து மல்லிகார்ஜூன கார்கே மற்றும் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் பேசியபோது,   காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமை மீது நாங்கள் அதிக நம்பிக்கையை வைத்து இருக்கிறோம்.   அவரே காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

அவர்கள் மேலும்,   தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து  தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.  அது தொடர்பாகவும் ஆலோசனை நடந்தது.   எதிர்காலத்தில் காங்கிரசை வலுப்படுத்துவது தொடர்பாகவும் செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.