×

பா.ஜ.க. கூட்டணியில் மீண்டும் சந்திரபாபு நாயுடு?.. சாதாரண சந்திப்புகளை அரசியல் கோணத்தில் பார்க்கக்கூடாது... சுனில் தியோதர்

 

சந்திரபாபு நாயுடு-மோடி சந்திப்பை அரசியல் கோணத்தில் பார்க்கக்கூடாது, தேசிய ஜனநாயக  கூட்டணியில் தெலுங்கு தேசம் இணையும் என்ற செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று பா.ஜ.க. வின் சுனில் தியோதர் தெரிவித்தார்.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி  முன்பு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க.வுடான கூட்டணியை சந்திரபாபு நாயுடு முறித்துக் கொண்டார். பா.ஜ.க. வாக்குறுதிகளை மீறுவதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். மேலும் அது முதல் பா.ஜ.க.வை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலையில் குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவை தெலுங்கு தேசம் கட்சி ஆதரித்தது. முர்மு பழங்குடி சமூகத்தை  சேர்ந்தவர் என்று சந்திரபாபு நாயுடு கட்சி ஆதரவளித்தது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். 

இந்த நிகழ்வுகள் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்புவதற்கான முயற்சியாக கருதப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் என ஊகங்கள் கிளம்பியுள்ளது.ஆனால் இதனை பா.ஜ.க. மறுத்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர பா.ஜ.க. இணை பொறுப்பாளரான சுனில் தியோதர் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி இணையும் என்ற  செய்திகள் ஆதாரமற்றவை. இது குறித்து கட்சியின் மத்திய ஆட்சி குழு முடிவெடுக்கும், கூட்டம் எதுவும் நடக்கவில்லை. அந்த செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. தெலுங்கு  தேசம் கட்சி மன விளையாட்டுகளில் நிபுணர். 

கட்சி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, ஆசாத கா அம்ரித் மஹோத்ச்வ் போன்ற தேசிய நிகழ்ச்சிகளில் கட்சிகளை ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி எப்போதும் நம்புகிறார். ஒரு நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பிரதமர், மேலும் பல தலைவர்களையும் சந்தித்தார். ஜெகன் மோகன் ரெட்டி பலமுறை டெல்லி செல்கிறார், அதற்காக ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. சாதாரண சந்திப்புகளை அரசியல் கோணத்தில் பார்க்கக்கூடாது. இரண்டு கட்சிகளும் (தெலுங்கு தேசம், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ்) வம்ச அரசியல் மற்றும் ஊழல்வாதிகள். எங்களிடம் தெளிவான அறிவுறுத்தல்கள் உள்ளன, நாங்கள் ஆந்திராவில் கட்சியை அதன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதை நாங்கள் பின்பற்றுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.