×

சந்திரசேகர் ராவ்-நிதிஷ் குமார் சந்திப்பு... பகல் கனவு காணும் இருவரின் சந்திப்பு.. பா.ஜ.க.வின் சுஷில் குமார் மோடி கிண்டல்

 

தெலங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ்- பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சந்திப்பு, பகல் கனவு காணும் இருவரின் சந்திப்பு என்று பா.ஜ.க.வின் சுஷில் குமார் மோடி கிண்டல் செய்தார்.


பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவும் தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை உருவாக்க விரும்புகின்றனர். தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நேற்று பீகார் சென்றார். பாட்னாவில் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து பேசினார். அப்போது இரு தலைவர்களும் அரசியல் நிலவரம் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தியதாக தகவல்.

கே.சந்திரசேகர் ராவ் மற்றும் நிதிஷ் குமார் சந்திப்பை பா.ஜ.க. கிண்டல் செய்துள்ளது. பா.ஜ.க.வின் மாநிலங்களவை எம்.பி. சுஷில் குமார் மோடி இது தொடர்பாக கூறுகையில், இது அந்தந்த மாநிலங்களில் தங்களள் அடித்தளத்தை (செல்வாக்கு) இழந்த, நாட்டின் பிரதமராக ஆசைப்படும் இரண்டு தலைவர்களின் (கே.சந்திரசேகர் ராவ்- நிதிஷ் குமார்) சந்திப்பு. இது பிரதமர் நரேந்திர மோடியின் முன் நிற்காத, பகல் கனவு காணும் இருவர் சந்திப்பு. இந்த சந்திப்பு எதிர்க்கட்சி ஒற்றுமையின் சமீபத்திய நகைச்சுவை நிகழ்ச்சி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திப்பதை தவிர்த்து வந்தார். அதேபோல் நிதிஷ் குமார் தேசிய  ஜனநாயக கூட்டணியில் முன்பு இருந்தபோதும் பிரதமர் மோடியுடான சந்திப்பை பல்வேறு காரணங்கள் கூறி தவிர்த்து வந்தார் என்பத குறிப்பிடத்தக்கது. இதனை குறிப்பிட்டுதான் பிரதமர் மோடியின் முன் நிற்காத இரண்டு தலைவர்கள் என்று அவர்களை சுஷில் குமார் மோடி குறிப்பிட்டுள்ளார்.