×

மேற்கு வங்கத்தில் இடத்தை கூட வெல்ல பா.ஜ.க. போராடும்... திரிணாமுல் காங்கிரஸ் 

 

மேற்கு வங்கத்தில் இடத்தை கூட வெல்ல பா.ஜ.க. போராடும் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பா.ஜ.க., அந்த 77 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எதன் எதிரொலியாக, பா.ஜ.க.விலிருந்து பலர் விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தவர்கள் தற்போது மீண்டும் தாய் கட்சியான திரிணாமுல் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், பா.ஜ.க.விலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தவர்கள் அல்லது அந்த கட்சிக்கு திரும்பியவர்களை பா.ஜ.க.வின் மூத்த எம்.பி. லாக்கெட் சட்டர்ஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். லாக்கெட் சட்டர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் மத்தியில் கட்சியின் ஆதரவுத் தளம் இன்னும் அப்படியே உள்ளது. கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் சந்தர்ப்பவாதிகள், அடுத்த மக்களவை  தேர்தலில் மேற்கு வங்கத்தில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என தெரிவித்தார்.

லாக்கெட் சட்டர்ஜியின் கருத்து குறித்து திரிணாமுல் காங்கிரஸின் பொதுச்செயலாளர் குணால் கோஷ் கூறுகையில், மாநிலத்தில் ஒரு இடத்தை கூட வெல்ல பா.ஜ.க. போராடும். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் லாக்கெட் சட்டர்ஜியின் தொகுதியில் நடந்த முடிவுகள் நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். அவருக்கு மாநில தலைவர் பதவி நாற்காலி மீது கண் உள்ளது போல் தெரிகிறது, அவர் தனது கட்சி தலைமையை மகிழ்விப்பதற்காக இது போன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் என தெரிவித்தார்.