×

பங்கேற்பவர்களின் எண்ணிக்கை போலீசார் எண்ண வேண்டும் என்றால் எந்த கூட்டத்தையும் நடத்த முடியாது.. டெப் கருத்து

 

பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை போலீசார் ஒவ்வொரு முறையும் எண்ண வேண்டும் என்றால் எந்த கூட்டத்தையும் நடத்த முடியாது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெப் தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த மே 31ம் தேதியன்று கே.கே. என்றழைக்கப்படும் பிரபல பாலிவுட் பாடகர் கிருஷ்ணகுமார் குன்நாத் ஒருநேரடி இசை நிகழ்ச்சியை நடத்தினார். அந்த  நிகழ்ச்சி முடிந்த பிறகு  கே.கே. காலமானார். கே.கே.வின் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இசை நிகழ்ச்சி நடந்த அரங்கில் அளவுக்கு அதிகமாக கூட்டத்தை அனுமதித்தது, நிகழ்ச்சியில் நிர்வாகத்தை தவறாக நிர்வகித்ததாக பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

கே.கே. மறைவு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், மேற்கு வங்க காவல்துறை மற்றும் நிர்வாகத்துக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெப் கருத்து தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெப் இது தொடர்பாக கூறியதாவது: கலைஞர் மீதுள்ள அன்பினால் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு முறையும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை போலீசார் கணக்கிட வேண்டும் என்றால், அவர்கள் (போலீசார்) இசை நிகழ்ச்சிகளை மட்டுமல்ல அனைத்து கூட்டங்களை நிறுத்த வேண்டும். 

தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோதும், அரசியல் நிகழ்வுகளில் மக்கள் எண்ணிக்கையில் கோவிட்-19 கட்டுபாடுகள் கடைப்பிடிக்கவில்லை. அது எங்களுடையதாக (திரிணாமுல் காங்கிரஸ்) இருந்தாலும் சரி, மற்றவர்களாக (எதிர்கட்சிகள்) இருந்தாலும் சரி, லட்சக்கணக்கான மக்கள் கூட்டங்களில் கலந்து கொள்வதை நாங்கள் பார்த்திருக்கிறோம். அது சரி என்றால், இந்த நிகழ்ச்சியை மட்டும் குற்றம் சொல்வது தேவையற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.