×

ஒலி பெருக்கி இல்லாத காலத்தில் கடவுள் இல்லையா?...தேவையற்ற பிரச்சினைகளுக்கு மத சாயம் பூசுகிறார்கள் தேஜஸ்வி
 

 

ஒலி பெருக்கி இல்லாத காலத்தில் கடவுள் இல்லையா?, தேவையற்ற பிரச்சினைகளுக்கு மத சாயம் பூசுகிறார்கள் என ஒலி பெருக்கி விவகாரத்தை பிரச்சினையாக்குபவர்கள் மீது பீகாரின் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிராவில் மே 3ம் தேதிக்குள் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் ஹனுமான் பாடல்களை ஒலிபெருக்கிகளில் இசைப்போம். இது ஒரு சமூக பிரச்சினை, மதப் பிரச்சினை அல்ல. இந்த விஷயத்தில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள் என அண்மையில் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே அம்மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து ஒலிபெருக்கி விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் பல்வேறு தரப்பினரும் ஒலி பெருக்கி குறித்து மாறுப்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பீகார் மாநிலம் பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு  போன்ற தீவிரமான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ஒலிபெருக்கிகள் மற்றும் புல்டோசர்கள் பற்றிய விவாதங்கள் நடக்கின்றன. 1925ம் ஆண்டில்தான் ஒலி பெருக்கி கண்டுபிடிக்கப்பட்டது. 1970களில் இந்தியாவில் கோயில்கள் மற்றும் மசூதிகளில் அதன் (ஒலி பெருக்கிகள்) பயன்பாடு தொடங்கியது. 

ஒலி பெருக்கிகள் இல்லாத காலத்தில் கடவுளும், இறைவனும் இல்லையா? ஒலி பெருக்கிகள் இல்லாதபோதும் பூஜைகளும், பஜனைகளும் நடக்கின்றன. மதம் மற்றும் கர்மாவின் சாரத்தை புரிந்து கொள்ளாதவர்கள் தேவையற்ற பிரச்சினைகளுக்கு மத சாயம் பூசுகிறார்கள். சுயநினைவு கொண்ட ஒருவர் இந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.