×

பிரச்சாரத்தில் பயங்கரம் - கன்னையாகுமார் உயிர்பிழைத்தார்
 

 

தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த கன்னையா குமார் மீது ஆசிட் வீசப்பட்டதால் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.   டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக இருந்தவர் கன்னையா குமார்.    இவர் கல்லூரி காலத்திலிருந்தே பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களை கடுமையாக எதிர்த்து பேசி வருகிறார்.

 அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த கன்னையா குமார் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.   இதன் பின்னர் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக லக்னோ சென்றிருக்கிறார் கன்னையா குமார்.  அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற போது மர்ம நபர்கள் சிலர் அவர் மீது ஆசிட் வீசி உள்ளனர் .   இதில், அவருடன் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் மீதும் ஆசிட் பட்டிருக்கிறது.

 இந்த ஆசிட் தாக்குதலில் கன்னையா குமார் உயிர் தப்பியதாக தெரிவித்திருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.   ஆசிட் வீசிய மர்ம நபர்களை தொண்டர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். 

 தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த கன்னையாகுமாருக்கு எதிராக பலர் கோஷமிட்டனர்.   அப்போது தேவன்ஷ் பாஜ்பாய் என்பவர் அவர் மீது மை வீசியுள்ளார்.   அது ஆசிட்டா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 ஆசிட் வீசியதாகவும் அதில் கன்னையாகுமார் உயிர் பிழைத்ததாகவும் காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்துள்ள நிலையில்,   அது மை’யா ஆசிட்டா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளது உ.பி.  தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.