என்னுடைய தியாகம் பெரிது; அதற்காகவே ஈபிஎஸ் எனக்கு இந்த பதவியை கொடுத்தார்- தமிழ்மகன் உசேன்
முன்னாள் அவைத்தலைவர் மதுசூதனனை போல நான் கிடையாது, என்னுடைய தியாகம் பெரியது என தமிழ்மகன்உசேன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அண்மையில் அவை தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன்உசேன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “நான் 60 ஆண்டுகள் கட்சி பணி செய்தவன், என்னுடைய வயது 85, முதன் முதலில் எம்ஜிஆர் ரசிகர் மன்றம் தொடங்கியவன் நான், திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேறியதும் கட்சி தொடங்க வேண்டும் என முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றியவன் நான். தனக்கு போக்குவரத்து துறையில் எம்ஜிஆர் வேலை வாங்கி கொடுத்தார். பின்னர் வேலையை துறந்தேன். அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றிய போது எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேறியதால் 24 பயணிகளை ஏற்றி வந்த பேருந்தை நடுரோட்டில் விட்டுவிட்டு பணியில் இருந்து ராஜினாமா கடிதம் கொடுத்தேன்.
மறைந்த முன்னாள் அவைத்தலைவர் மதுசூதனன் நான் போல கிடையாது. என்னுடைய தியாகம் பெரியது என்பதால் தான் தற்போது அவைத்தலைவர் பதவியை எடப்பாடி கொடுத்துள்ளார். ஆ.ராசா பேசியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் ஏன் வாய் திறக்கவில்லை” எனக் கூறினார்.