×

தங்கமணியின் முதலமைச்சர் கனவு  - ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி தருவதாக பேரம்

 

தங்கமணியின் முதல்வர் கனவு குறித்தும்,  ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி தருவதாக நடந்த பேரம்  குறித்தும் போட்டு உடைத்து இருக்கிறார் புகழேந்தி. 

 ஓ .பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி,  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களை  சந்தித்து பேசி உள்ளார்.  அப்போது,  எடப்பாடி பழனிச்சாமி அணி- ஓபிஎஸ் அணி இடையிலான விவகாரம் குறித்து  கருத்துக்கள் தெரிவித்திருக்கிறார்.

 தங்கமணியும் வேலுமணியும் எடப்பாடி பழனிச்சாமியை பின்புலமாக இருந்து இயக்குகிறார்கள்.   தங்கமணிக்கு முதலமைச்சராக வேண்டும் என்று கனவு இருந்தது.  அதில் ஏற்பட்ட விருப்பு வெறுப்பின் காரணமாகவே நாமக்கல் மாவட்டத்தில் நாலு தொகுதிகளை அதிமுக இழந்தது என்று கூறியிருக்கிறார் புகழேந்தி .

அவர் மேலும் அது குறித்து,   எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு இரட்டை இலை சின்னம் இல்லாமல் தேர்தலில் நின்று தங்கமணியால் வெற்றி பெற முடியுமா? தனக்கு பதவி வேண்டும் என்று ஓபிஎஸ் யாரிடமும் கேட்கவில்லை .  ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி தருவதாக தங்கமணி பேசி இருக்கிறார். இவர்கள் யார் அமைச்சர் பதவி தருவதற்கு? இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? பிரதமர் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் இல்லாத அதிகாரமா?  என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

 பிரிந்து இருக்கின்ற அதிமுகவினர்,  சசிகலா உள்ளிட்டோருடன்  இணைந்து செயல்பட்டு அதிமுகவை வலுப்படுத்தவதற்கு தயாராக இருக்கிறார் ஓபிஎஸ் என்று தெரிவித்திருக்கும் புகழேந்தி,   எடப்பாடி பழனிச்சாமி உடன் இருக்கும் சில முக்கிய புள்ளிகள் விரைவில் பாஜகவில் சேர தயாராக இருக்கிறார்கள் என்றும் கூறி எடப்பாடி அணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.