×

அமைச்சர் சொன்ன அந்த வார்த்தை.. செருப்பு வீச்சின்  பின்னணி

 

மதுரை விமான நிலையத்தின் வாசலில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசி மறியலில் ஈடுபட்டனர். அமைச்சர் சொன்ன அந்த வார்த்தையால்தான் அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் யங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் லட்சுமணன் உட்பட 4 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.  லட்சுமணன் உடல் தனி விமானம் மூலம் ஹைதராபாத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.  மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு தமிழக நிதி அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட்டபோது அவரின் கார் மீது செருப்பு வீசப்பட்டது.   பாஜக பிரமுகரான பெண் ஒருவர் செருப்பை வீசியுள்ளார்.  

மதுரை விமான நிலைய  நுழைவுவாயில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.  திமுகவினர் கொதித்தெழுந்தனர்.   அண்ணாமலை மற்றும் மோடியை வறுத்தெடுத்து வருகின்றனர்.  செருப்பு பிஞ்சிரும் அண்ணாமல, எங்கள் கால்களிலும் செருப்பு உள்ளது என்று கடுமையாக திட்டி தீர்த்து வருகிறார்கள்.

செருப்பு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை அவனியாபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். அதை,  ’’சங்கி கரப்பான்களில் 5 சிக்கியிருக்கின்றன. பூச்சிக்கொல்லி அடிக்கபட்டுவருகிறது என்று தகவல்கள் வருகின்றன. மீதம் உள்ளவைகளும் விரைவில் சட்டப்படி ஜெயில் கம்பிகளுக்கிடையில் நசுக்கப்படும்’’ என்றார் டிஆர்பி ராஜா எம்.எல்.ஏ..

திமுகவினர் இப்படி கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அமைச்சர் கார் மீது பாஜகவினர் ஏன் செருப்பு வீசினார்கள் என்ற தகவலும் பாஜக தரப்பிலும் பரவுகிறது.

 ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பின்னரே பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சொன்னதால் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.   அமைச்சர் சொன்ன அந்த வார்த்தையும் பாஜகவினரை ஆத்திரமடைய வைத்திருக்கிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்ததால் அங்கு பாஜகவினர் குவிந்திருந்தனர் .  அப்போது குவிந்திருந்த பாஜகவினர் கூட்டத்தை பார்த்து அமைச்சர் பி. டி. ஆர்.,   இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்று எரிச்சலாக கேட்டிருக்கிறார்.   இவர்களை எல்லாம் இங்கு யார் உள்ளே விட்டது என்றும் சொல்லி கோபத்தை  ஏற்படுத்தி இருக்கிறார்.  இந்த கோபத்தில் தான் அமைச்சரின் கார்  வெளியே வந்த போது காரை வழிமறித்து செருப்பை வீசி தங்களது எதிர்ப்பை காட்டி இருக்கிறார்கள் பாஜகவினர்.