குஜராத்தில் இருந்தது ஒரே ஒரு எம்.எல்.ஏ... தேர்தலில் சீட் கொடுக்காததால் கட்சியிலிருந்து விலகல்.. தேசியவாத காங்கிரஸூக்கு பின்னடைவு
எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காததால் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. காந்தல் ஜடேஜா அந்த கட்சியிலிருந்து விலகினார். குஜராத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இருந்த ஒரே ஒரு எம்.எல்.ஏ. காந்தல் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மொத்தம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக குடியானா உள்பட 89 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு குஜராத்தில் ஒரே ஒரு எம்.எல்.ஏ. (குடியானா தொகுதி எம்.எல்.ஏ.
தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான காந்தல் ஜடேஜா, கடந்த 2012 மற்றும் 2017ல் போர்பந்தர் மாவட்டத்தில் உள்ள குடியானா தொகுதியில் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தார். இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வைத்தது. இதனையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உம்ரேத், நரோடா மற்றும் தேவ்கத் பரியா ஆகிய 3 தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்கியது. குடியானா தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு சென்று விட்டது. இதனால் குடியானா தொகுதியில் போட்டியிட காந்தல் ஜடேஜாவுக்கு தேசியவாத காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.
இதனையடுத்து, காந்தல் ஜடேஜா நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். காந்தல் ஜடேஜா குஜராத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் படேலுக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், இந்த முறை தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அனைத்து கட்சி பதவிகள் மற்றும் முதன்மை உறுப்பினர் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் கட்சி அனுமதி கொடுக்காத நிலையில், கடந்த 11ம் தேதியன்று குடியானா தொகுதியில் போட்டியிட காந்தல் ஜடேஜா வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.