×

உச்ச நீதிமன்றம் உத்தரவு.. பாலாசாகேப் தாக்கரேவின் இந்துத்துவாவுக்கு கிடைத்த வெற்றி- ஏக்நாத் ஷிண்டே

 

சிவ சேனா எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைக்க உத்தரவிட்டதை குறிப்பிட்டு இது பாலாசாகேப் தாக்கரேவின் இந்துத்துவாவுக்கும், ஆனந்த் திகேவின் கருத்துக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஏக்நாத் ஷிண்டே உள்பட சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரின் பதவியை ஏன் பறிக்கக்கூடாது என்று கேட்டு மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் துணை சபாநாயகர் 16 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். மேலும் 27ம் தேதி (நேற்று) மாலை 5.30 மணிக்குள் பதில் அளிக்க  வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதனை எதிர்த்து கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும், ஏக்நாத் ஷிண்டே நீக்கி விட்டு சட்டப்பேரவை கட்சி தலைவராக அஜய் சவுத்ரியை நியமனம் செய்தததை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த 2 மனுக்களையும் உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணை செய்தது. அதனை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை ஜூலை 11ம் தேதி வரை நிறுத்தி வைத்தது. மேலும் தகுதீ நீக்கம் செய்யப்பட்ட நோட்டீஸூக்கு சிவ சேனா எம்.எல்.ஏ.க்களுக்கு பதில் அளிக்க கொடுத்த காலக்கெடுவை ஜூலை 11ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் நீட்டித்தது. எந்தவொரு நடவடிக்கையையும் தொடர துணை சபாநாயகரின் சட்டப்பூர்வ அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும். 

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்று கோரிய மகாராஷ்டிரா அரசின் வேண்டுகோள் தொடர்பான மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் முகாம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினால், மகாராஷ்டிரா அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகள் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து ஏக்நாத் ஷிண்டே டிவிட்டரில், இது பாலாசாகேப் தாக்கரேவின் இந்துத்துவாவுக்கும், ஆனந்த் திகேவின் கருத்துக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் என பதிவு செய்துள்ளார்.