×

திருமாவை பேசியதால் கொதித்தெழுந்த விசிகவினர்! எச்.ராஜாவின் உருவபொம்மை எரிப்பு

 

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் இந்து ஆலய பாதுகாப்பு குழுவின் சார்பாக பழனி இடும்பன் கோவில் குளக்கரையில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா,   மன்னார்குடி சென்டலங்கார ஜீயர் ஆகியோர் கலந்து கொள்ள இருந்தார்கள்.

 இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கவில்லை என்று சொல்லியும், பழனி காவல் உட்கோட்டம் முழுவதும் காவல் சட்டப்பிரிவு அமலில் இருப்பதாக சொல்லி சட்டம்  ஒழுங்கு பிரச்சனை,  பொது அமைதிக்கு குந்தகம்  ஏற்படும் என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதாக தெரிவித்தனர் போலீசார்.

 இதை அறிந்த  எச். ராஜா,     அவர் போலீசாரின் தடை உத்தரவை மீறி இந்த நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்தப் போவதாக அறிவித்துவிட்டு சம்பவ இடம் நோக்கி சென்றார் .  இதை தெரிந்து கொண்ட போலீசார் பழனி உட்கோட்ட காவல் பிரிவு எல்லை சத்திரப்பட்டியில் வைத்து திண்டுக்கல் சரக டி ஐ. ஜி. முருகேஷ் குமார் மீனா,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றி வளைத்து எச். ராஜாவை கைது செய்தனர்.

கைது நடவடிக்கையின்போது ஒத்துழைப்பு தராமல் எச். ராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.   அப்போது எச்.ராஜா,  ‘’பழனி நெய்க்காரப்பட்டியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவு உள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது.   இதை நான் கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே என்னை கைது செய்து இருக்கிறார்கள்’’ என்றார்.

மெலும்,   எச். ராஜா,   ’’டெல்லியில் இருந்து கொண்டே தமிழகத்தில் இருக்கும் தென் மாவட்டங்களை  கொளுத்துவேன் என பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை எல்லாம் கைது செய்யாத போலீசார் என்னை கைது செய்து இருக்கிறார்கள்’’ என்றார்.

 திருமாவளவன் குறித்து எச். ராஜா பேசியதால் எச். ராஜாவின் பேச்சுக்கு கட்டணம் தெரிவித்து பழனியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பழனி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திரண்டனர் .  அப்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருமாவளவன் பற்றி அவதூறு பேசிய ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி எச். ராஜாவின் உருவப்படத்தை எரித்தனர்.  அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள்   தொண்டர்களை கைது செய்து தனியார் மன்றத்தில் அடைத்து வைத்துள்ளனர்.