×

பாட்டுப்பாடி  எடப்பாடி டீமை சமாதானப்படுத்திய வளர்மதி

 

ஓ. பன்னீர் செல்வத்தை வெளியேறச் சொல்லி பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவேசமாக சத்தம் போட்டதால் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஓடிவந்து ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற பாட்டை பாடி அவர்களை சமாதானப்படுத்தினார். அடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் ஓடிவ்ந்து சமாதானப்படுத்தினார். அடுத்து வைகைச்செல்வன் ஓடிவந்து அமைதிப்படுத்தினார்.

 ஒற்றைத் தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் கொண்டு வரக்கூடாது என்று ஓபிஎஸ் சொல்வதைக் கேட்காமல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை  தீர்மானத்தை கொண்டுவர முடிவு செய்ததால்,  பொதுக்குழுவினை தடைசெய்ய வேண்டுமென்று பல்வேறு வகைகளில் முயற்சித்து வந்தார்  பன்னீர்செல்வம் . கடைசியில் பொதுக்குழுவை தடை செய்ய முடியாவிட்டாலும் தான் நினைத்தது போலவே பொதுக்குழுவில் தனித் தீர்மானம் எதையும் கொண்டு வரக்கூடாது என்று நீதிமன்றத்தின் மூலமாக உத்தரவை பெற்று இருக்கிறார்.

 இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் கடும் ஆவேசத்தில்  இருக்கிறார்கள்.   இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 2665 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.  காலையில் 5 மணியிலிருந்தே பொதுக்குழு உறுப்பினர்கள் அரங்கத்திற்கு வர தொடங்கிவிட்டார்கள்.   7:00 மணிக்கு எல்லாம் பெரும்பாலான உறுப்பினர்கள் அரங்கத்தில் அமர்ந்து விட்டனர்.  காலை 8 மணிக்கே எடப்பாடி பழனிச்சாமியும்,  ஓ. பன்னீர்செல்வமும் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டாலும்  போக்குவரத்து நெருக்கடியால் அவர்கள் வரத் தாமதமானதால் பொதுக்குழு பதினொன்று முப்பது மணிக்கு தான் தொடங்கியது .

ஓ. பன்னீர்செல்வம் மண்டபத்தின் நுழைவாயிலில் நுழைந்ததுமே அவரை பார்த்ததும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் ஒற்றைத்தலைமை வேண்டும் என்றும்,  துரோகி ஓபிஎஸ் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.   பன்னீர்செல்வம் மேடை ஏறியதும் அவரை வெளியே செல்லும்படி பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவேச கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தார்கள்.

 எடப்பாடி ஆதரவாளர்களின் இந்த திடீர் ஆவேசத்தால் அதிர்ச்சியடைந்தார் பன்னீர்செல்வம்.   அப்போது முன்னாள் அமைச்சர் வளர்மதி ஓடிவந்து,   கூச்சல் போட்ட உறுப்பினர்களை பார்த்து ,   ’’ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை’’ என்கிற எம்ஜிஆரின் பாடலை பாடி சமாதானப்படுத்தி பார்த்தார். அதன்பின்னர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் வந்து சமாதானப்படுத்தினார்.  வைகைச்செல்வன் ஓடிவந்து கூட்டத்தினரை சமாதானப்படுத்தினார்.  இதனால் பொதுக்குழு மண்டபத்திற்குள் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.