ஸ்டாலின் மேல கோபமா இருப்பீங்கன்னு தெரியும்.. முதல்வர் பேச்சில் அரங்கம் கலகல
சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக இளைஞரணி செயலியை இன்று தொடங்கி வைத்து பேசினார் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின்.
அவர், அண்ணாவின் மணிவிழாவை நடத்துவதற்காக அவரிடத்தில் தேதி கேட்க அவர் வீட்டிற்கு பார்க்க போனேன். உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டு மாடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். கீழே ஹாலில் ராஜா ராம், ஆசை தம்பி, என். வி. என் போன்ற கட்சி முன்னோடிகள் எல்லாம் உட்கார்ந்து இருக்கிறார்கள். தலைவர் இருந்தால் ஏதாவது திட்டுவார் என்பதற்காக தலைவர் இல்லாதபோது நாங்கள் அங்கு போனோம்.
அண்ணாவை பார்க்க வேண்டும் என்று சொன்னே. இப்போது முடியாது உடம்பு சரியில்லை அவர் படுத்துக் கொண்டிருக்கிறார் போங்கள் என்று சொன்னார்கள். சரி என்று சொல்லிவிட்டு நான் கிளம்பி வந்து விட்டேன். இந்த செய்தி அண்ணாவுக்கு கிடைத்துவிட்டது . கலைஞர் மகன் வந்தான் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். ஏன் திருப்பி அனுப்பி விட்டீர்கள் என்று கேட்டிருக்கிறார் . உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று திருப்பி அனுப்பிவிட்டோம் என்று சொல்லி இருக்கிறார்.
உடனே அழைத்து வாருங்கள் என்று அண்ணா சொல்லியிருக்கிறார். அவர் கார் 7007..நன்றாக ஞாபகம் இருக்கிறது.. மஞ்சள் கார்.. கவர்மெண்ட் கார். அந்த கார் அவருடைய டிரைவர் சண்முகம். இப்போது அவர் இல்லை. நான் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் . அந்த கார் கோபாலபுரத்தில் வந்து நிற்கிறது. என்னவென்று கேட்டால் அண்ணா அழைத்துக் கொண்டு வரச் சொல்கிறார் என்று டிரைவர் வாப்பா என்று என்னை கூப்பிட்டார். சரி என்று காரில் ஏறி அண்ணாவின் இல்லத்திற்கு சென்றேன்.
அப்போது அண்ணா படுத்திருந்தார். ஏன் வந்தாய் போய்விட்டாயே என்று கேட்டார். உங்களிடம் தேதி கேட்க வந்தேன். கீழே இருந்தவர்கள் உங்களை பார்க்க முடியாது உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டார்கள் என்று சொன்னேன். அவன் கிடக்கிறான் விடு.. என்ன விஷயம் என்று சொல் என்றார். தேதி வேண்டும் என்றேன். எதற்காக என்றார். உங்கள் மணிவிழாவை நடத்துவதற்காக என்று சொன்னேன். எங்கு நடத்தப் போகிறாய் என்று கேட்டார். கோபாலபுரத்தில் என்று சொன்னேன். உங்க அப்பாவுக்கு தெரியுமா என்று கேட்டார். தெரியும் என்று சொன்னேன். சரி தரேன் என்று சொன்னார். இல்லை இப்போதே கொடுங்கள் என்று நான் பிடிவாதமாக கேட்டேன் . என்ன.. உங்க அப்பனை மாதிரி பிடிவாதக்காரனாக இருக்கிறாய் என்று.. இப்படியே கேட்டார். சரி தரேன் போ என்று அனுப்பினார். தேதியும் கொடுத்தார்.
ஆனால் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு உடனடியாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு அவர் அமெரிக்கா சென்று விட்டார். அதனால் அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த நிகழ்ச்சியை அண்ணாவிடத்தில் தேதியை கேட்டு அதற்கு பிறகு நடத்துகிறோம் . அது எந்த இடம் என்றால் தலைவருடைய வீட்டிற்கு பக்கத்தில் கிருஷ்ணன் கோயில் இருக்கிறது. அந்த கிருஷ்ணன் கோயிலுக்கு முன்னாடி மேடையை போட்டு மறைத்து விட்டோம். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல மூன்று நாள்.
ஏனென்றால் பெரிய பெரிய தலைவர்கள் வருகிறார்கள். பெரிய மேடை போட வேண்டும். இப்போது எல்லாம் சாதாரணமாக வந்து போட்டு விடுகிறார்கள் . அது வேறு. போட்டுவிட்டு அடுத்த நாள் கழட்டி விட்டு சென்று விடுகிறார்கள். அடுத்த நிமிடமே இப்போது கழட்டி விடுகிறார்கள். அப்போது எல்லாம் அதற்கு கால் போட வேண்டும். அந்த அடிப்படை வேலை எல்லாம் செய்ய வேண்டும் . ஸ்ட்ராங்காக போட வேண்டும் என்று மூன்று நாள் மேடை போட்டு கோவிலையே மறைத்து விட்டோம்.
அதே கோபாலபுரத்தில் நாலாவது தெருவில் நான்கு வீடு தள்ளி டாக்டர் கிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார். இப்போது அவர் இல்லை. தலைவருக்கு அவர் தான் டாக்டர். தலைவருக்கு மட்டுமல்ல எனக்கும் உதயாவுக்கும் அங்கு இருக்கக்கூடிய எல்லாருக்கும் அவர் தான் டாக்டர் . எங்களுக்கு அவர் குடும்ப டாக்டர். அவர் ஒரு நாள் இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு ஒரு வாரம் முன்பாக தலைவர் இடத்தில் வந்து சொல்கிறார். என்ன உங்க மகன் கிருஷ்ணன் கோயிலில் மறைத்து மேடை போட்டு வைத்திருக்கிறான். நாங்கள் எல்லாம் இந்த முனையில் இருந்து காலில் செருப்பை கழட்டி விட்டு அங்கிருந்து கும்பிட்டு விட்டுப் போய் விடுவோம். உள்ளே வந்து கும்பிட மாட்டோம். ஆனால் இப்படி போட்டு வைத்திருக்கிறானே . இப்போது எங்களுக்கு எவ்வளவு இடைஞ்சலாக இருக்கிறது கேட்டு இருக்கிறார்.
அதற்கு, சரி சரி தப்பாக நினைக்காதீர்கள் என்று தலைவர் அவருக்கு சமாதானம் செய்து அனுப்பி விட்டார். அந்த விஷயத்தை மேடையில் பேசினார் கலைஞர். என் மகன் ஸ்டாலின் இப்படி மேடை போட்டு வைத்திருக்கிறான் என்று என்னுடைய குடும்ப டாக்டர் கிருஷ்ணன் வந்து புகார் செய்தார். ஸ்டாலின் மீது இங்கு இருப்பவர்கள் எல்லாம் கோபமாக இருப்பீர்கள் என்று தெரியும். கலைஞர் பேசுகிறார்.. என் டாக்டரே வந்து சொன்னார். நான் சொன்னேன் டாக்டரிடம் தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள். ஸ்டாலினுடைய கனவில் கிருஷ்ண பரமாத்மா தோன்றி எல்லாரும் என்னை ரோட்டில் இருந்து கும்பிட்டு சென்று விடுகிறார்கள். ஒரு நான்கு நாளைக்காவது உள்ளே வந்து கும்பிட சொல் என்று சொல்லி இருக்கிறார் . அதற்காகத்தான் மேடை போட்டு விட்டான் என்று நினைக்கிறேன் என்று சொன்னார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சைக் கேட்டு அரங்கம் கலகலவென்று சிரித்தது.