அடுத்த ஆடியோ லீக்! ‘’எடப்பாடியை பச்சை பச்சையா திட்டுறாங்க’’, ’’எடப்பாடியை அடக்கவே முடியாது; ஸ்டே வாங்குங்க ஓபிஎஸ்!’’
பொன்னையன் பேசிய அடுத்த ஆடியோ லீக் ஆனது. மேலும் பல நிர்வாகிகள் பேசிய ஆடியோக்களில் உள்ள மெசேஜ் லீக் ஆகி இருக்கிறது. அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் இவற்றை லீக் செய்திருக்கிறார்.
அதிமுகவில் ஓபிஎஸ் -இபிஸ் மோதல் உச்சத்தில் இருக்கும் நிலையில் கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் கன்னியாகுமரியை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனிடம் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில், கேபி முனுசாமி, தங்கமணியின் ஊழல்களை சொல்லி இருந்தார். எடப்பாடி பின்னால் 9 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளதாக சொல்லி இருந்தார். எடப்பாடியை ஓரங்கட்ட பார்க்கிறார் முனுசாமி. கோடி கோடியா அடித்து வைத்திருக்கிறார்கள். பணத்திற்காக அடித்துக்கொள்கிறார்கள் என்று பல ரகசியங்களை சொல்லி இருந்தார்.
இந்த ஆடியோ அதிமுகவிற்குள் , குறிப்பாக எடப்பாடி அணியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அது என் குரல் அல்ல மிமிக்ரி செய்திருக்கிறார்கள் என்கிறார் பொன்னையன். ஆனால், கோலப்பனோ, அது அவர் குரல்தான். 17 நிமிடங்கள் பேசினார். அதற்கான ஆதாரம் இருக்கிறது. யாருக்காகவோ பயப்படுகிறார் என்கிறார்.
இந்நிலையில், ‘’அது பொன்னையன் ஆடியோதான். அவர் இப்போது பச்சைப்பொய் சொல்கிறார். இப்படி ஒரு பர்பெக்ட் வாய்ஸ் மேட்ச் செய்வதற்கான டெக்னாலஜி இன்னும் வரவில்லை. அவர் சொன்னது படியே எடுத்துக்கொண்டால் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள கலங்கம் இது. உடனே அவர் கோலப்பன் மீது சைபர் கிரைமில் புகார் கொடுக்க வேண்டியதுதானே’’ என்று கேட்கிறார் அஸ்பயர் சுவாமிநாதன்.
அவர் மேலும், ‘’சர்ச்சைக்கு பெயர் போனவர் பொன்னையன். இதே பொன்னையனின் மற்றொரு கால் என்னிடம் இருக்கிறது. அதில் அவர் ஓபிஎஸ்சிடம் என்ன சொல்கிறார் என்றால், தயவு செய்து நீங்க எப்படியாவது கோர்ட்டுல போய் ஸ்டே வாங்கிடுங்க. அப்படி நீங்க வாங்கலேன்னா இந்த ஆள(எடப்பாடி பழனிச்சாமி) அடக்கவே முடியாது. அதனால்தான் சொல்கிறேன். அது அவர் குரல்தான். அது அவரது எண்ணங்கள்தான். அந்த எண்ணங்கள் அனைத்துமே உண்மைதான்.
பொன்னையன் கால் மட்டுமல்ல. இன்னும் பலபேருடைய போன் கால் இருக்குது. அதுல எல்லோரும் எடப்பாடியை பச்சை பச்சையா திட்டுறாங்க. இந்த தலைமை கோடி கோடியா அடுச்சுட்டாங்க. என்ன பண்றதுன்னே தெரியலன்னு சொல்லுறாங்க. அந்த ஆடியோ எல்லாம் அடுத்துடுத்து வெளிவரத்தான் போகிறது. ’’என்று பரபரப்பை கூட்டுகிறார்.