இந்திராகாந்தி, அனந்தநாயகியை பார்த்து உங்கள் தலைவர் சொன்ன அரசியல் அசிங்கம்... பாஜக பாய்ச்சல்
பண்பாடு குறித்தும், கலாச்சாரம் குறித்தும் சொல்லியிருக்கும் அமைச்சர் துரைமுருகனுக்கு தமிழக பாஜக பதிலடி கொடுத்திருக்கிறது.
ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்த சென்ற பாஜகவினரை பார்த்து, ‘’இங்கே வருவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இவர்களையெல்லாம் யார் இங்கே உள்ளே விட்டார்கள்? என்று டாக்டர் சரவணன் உட்பட பாஜகவினரை பார்த்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆவேசமாக சொன்னதால் ஆத்திரமடைந்த பாஜகவினர் அவரது கார் மீது செருப்பு வீசி எதிர்ப்பை தெரிவித்தனர்.
மதுரை விமான நிலையத்திற்குள் வந்து மரியாதை செலுத்த உங்களுக்கு ப்ரோடோகால் (Protocall)இல்லை. அதனால் வெளியே சென்று மரியாதை செலுத்துங்கள் என்று சொல்லாமல் என்ன தகுதி இருக்கிறது என்றுகேட்டுவிட்டார். அவர் தெரியாமல் அப்படி கேட்டாரா? இல்லை அந்த வார்த்தையின் அர்த்தம் தெரிந்துதான் அப்படி கேட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால் பாஜகவினரை அந்த வார்த்தை கொதித்தெழ வைத்துவிட்டது.
இந்த நிலையில் , ’’செருப்பு வீசுவது, சிலைகளைச் சேதப்படுத்துவது போன்ற அசிங்க அரசியல் தவிர வேறு எதுவும் பா.ஜ.க.வுக்குத் தெரியாது என்பது அவர்களது பண்பாடற்ற நடவடிக்கைகளால் தெரிகிறது. பதற்றத்தைப் பற்ற வைத்து வன்முறைகள் மூலமாகக் கட்சியை வளர்க்கலாம் என்று அவர்கள் நினைத்தால் மக்கள் மன்றத்தில் அவர்கள் அரசியல் அநாதைகளாவது நிச்சயம் என எச்சரிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார் திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன்.
அவர் மேலும் தனது அறிக்கையில், ’’உயிரிழந்த இராணுவ வீரர் இலட்சுமணன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தேசியக் கொடி ஏற்றிய காரின் மீது காலணி வீசியிருக்கும் பா.ஜ.க.வினரின் அருவருக்கத்தக்க, அரசியல் பண்பாடற்ற செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டிற்காக உயிர்நீத்த ஓர் இராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்துவதிலும் இதுபோன்று அரசியல் ஆதாயம் தேடும் அநாகரிகச் செயலில் ஈடுபட்டு, அராஜகத்தை பா.ஜ.க.வினர் கையிலெடுத்திருப்பது கேவலமான அரசியல். அது ஒருவழிப் பாதையல்ல என்பதை பா.ஜ.க.வினர் உணர வேண்டும் என எச்சரிக்கிறேன்.mஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாமல், அராஜகத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடி விடலாம் என்று தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் கனவு காண வேண்டாம்.
ராணுவ வீரரின் உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தச் சென்ற அமைச்சரின் காரின் மீது தாக்குதல் நடத்தி - உயிரிழிந்த இராணுவ வீரரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.விற்கு நாட்டுப்பற்று பற்றிப் பேசத் துளியும் அருகதை இல்லை என்பதோடு, இச்சம்பவத்தின் வாயிலாக அந்தக் கட்சியின் நாட்டுப்பற்று சாயம் வெளுத்துப் போயிருக்கிறது.
செருப்பு வீசுவது, சிலைகளைச் சேதப்படுத்துவது போன்ற அசிங்க அரசியல் தவிர வேறு எதுவும் பா.ஜ.க.வுக்குத் தெரியாது என்பது அவர்களது பண்பாடற்ற நடவடிக்கைகளால் தெரிகிறது. பதற்றத்தைப் பற்ற வைத்து வன்முறைகள் மூலமாகக் கட்சியை வளர்க்கலாம் என்று அவர்கள் நினைத்தால் மக்கள் மன்றத்தில் அவர்கள் அரசியல் அநாதைகளாவது நிச்சயம் என எச்சரிக்கிறேன். ஊரெல்லாம் தேசியக் கொடி ஏற்ற வேண்டிய நேரத்தில், தேசியக் கொடி பறந்த காரில் செருப்பு வீசியதன் மூலமாக பா.ஜ.க.வின் கீழ்த்தர அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்’’என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்திருக்கிறார். அவர், ‘’இந்திரா காந்தியை மதுரையில் திமுகவினர் தாக்கி விட்டு ரத்தம் சொட்ட சொட்ட அவர் நின்ற போது, அது குறித்து உங்கள் தலைவர் சொன்ன அரசியல் அசிங்கமும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அனந்தநாயகியிடம் கேட்ட கேள்வியும், திமுகவின் பண்பாடு குறித்தும், கலாச்சாரம் குறித்தும் பறை சாற்றும்’’என்கிறார்.