×

அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி

 

மாநிலங்களை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்கவுள்ள நிலையில் அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்களான திமுகவை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ் பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அதிமுகவை சேர்ந்த நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ. விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூன் 22 ஆம் தேதியுடன் முடிகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் விகிதாரச்சார அடிப்படையில் திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் உள்ளது.

இந்த நிலையில் திமுவின் மாநிலங்களை பதவிக்கான வேட்பாளர்களாக ஆர்.கிரிராஜன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், எஸ்.கல்யாணசுந்தரம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு இடம் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மற்ற 2 இடங்களுக்கு  அதிமுக தலைமைகள் யாரை  வேட்பாளர்களாக அறிவிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதற்காக கடந்த வாரம்  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளரைத் தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  வழங்கப்பட்டது. ஆனாலும், இன்னும் எவ்விதமான முடிவும் எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.

தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ் சத்தியன், மதுரை முன்னாள் துணை மேயரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உள்பட பலரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதே போல், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும் கட்சியில் தங்களின் செயல்பாடுகளை தெரிவித்து இபிஎஸ்க்கு அழுத்தம்  கொடுத்து வருகின்றனர்.இவ்வாறு இரு தலைமைகளும் தங்களது ஆதரவாளர்களுக்கு இடம் கொடுக்க நினைப்பதால் வேட்பாளர் தேர்வில் போட்டா போட்டி நிலவி வருகிறது.

இதனிடையே மூத்த உறுப்பினர் செம்மலையும் தனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டுமென்று கோகுல இந்திராவும், வளர்மதி, உள்பட பலரும் தலைமைகளிடம் இடம் கேட்டு வலியுறுத்துவதால் இரண்டு வேட்பாளர்களை  தேர்ந்தெடுப்பதில் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் கட்சி தலைமைகள் திணறி வருகின்றனர். நாளை வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி 31 ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இறுதியாக அதிமுக மாநிலங்களை வேட்பாளர் 25 ம் தேதி  அறிவிப்பு வெளியாகலாம் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.